புதுச்சத்திரம், வ. 25நராசிபுரம் அருகே, போதை ஊசி, மாத்திரை விற்ற, தி.மு.க., நிர்வாகி உள்பட, 6 பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் பகுதியில் போதை மாத்திரை, போதை ஊசி விற்பனை செய்வதாக, புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு, குருசாமிபாளையம், பிள்ளாநல்லுார், ஆண்டகலுார்கேட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, குருக்கபுரம் அருகே உள்ள பிளாட் ஒன்றில், 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதை மாத்திரை, போதை ஊசிகளை பயன்படுத்திக்கொண்டிருந்தது தெரிந்தது. போலீசார் அங்கு சென்று, 6 இளைஞர்களை சுற்றி வளைத்தனர்.விசாரணையில், குருசாமிபாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் மகன் கோகுல்ராஜ், 27; இவர், பிள்ளாநல்லுார் டவுன் பஞ்., தி.மு.க., மாணவர் அணி துணை அமைப்பாளராக உள்ளார். மேலும், சாமியப்பன் மகன் கார்த்திக், 20, குமரேசன் மகன் கோகுல், 23, ராஜ்குமார் மகன் பூபதி, 24, மாதப்பன் மகன் பிரவீன்குமார், 20, கண்ணன் மகன் பிரவீன்குமார், 22, என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து போதை மாத்திரை, போதை ஊசிகளை பறிமுதல் செய்தனர். அவர்கள், ஆறு பேரையும் கைது செய்த புதுச்சத்திரம் போலீசார், நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.