| ADDED : மே 09, 2024 06:48 AM
சேலம் : சேலம், அம்மாபேட்டையில் உள்ள, நகை கடை உரிமையாளர் உள்பட, 3 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, அங்கு பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் புகார் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ராதேவி அறிக்கை:வாழப்பாடி, அண்ணா நகரை சேர்ந்தவர் ரஞ்சித், 25. இவர், சேலம், அம்மாபேட்டையில் உள்ள எஸ்.வி.எஸ்., நகை கடைக்காரர்கள், முதலீடு செய்த, 10 லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டதாக சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அதேபோல் ஓமலுார் அருகே சின்னப்பம்பட்டியை சேர்ந்த குமார், 49, என்பவர், 17.35 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக, மாவட்ட மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகார்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள், பொருளாதார குற்றப்பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை இணைத்து நகை கடை உரிமையாளர் சபரிசங்கர், மேலாளர் முருகன், ஊழியர் பிரகாஷ் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எஸ்.வி.எஸ்., நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட மக்கள், அசல் ஆவணங்கள், அடையாள அட்டையுடன் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்.