| ADDED : மார் 05, 2024 02:05 AM
சேலம்;சேலம் மாவட்ட எஸ்.பி., அருண்கபிலன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:குழந்தைகளை கடத்தி செல்ல சமீபத்தில் வெளி மாநிலங்களில் இருந்து, 400 பேர் வந்திருப்பதாகவும், சேலம் மாநகரம் கல்லாங்குத்து பகுதியில் மாறுவேடத்தில் வந்து சிறுமி ஒருவரை கடத்த முயன்றதாகவும், அப்போது மக்கள் பிடித்து அடித்ததாகவும், வாட்ஸ் ஆப் மூலம் பரவி வரும் காணொளி பழையது. சமீப காலமாக, சில விரும்பத்தகாதவர்கள் பழைய வீடியோக்கள், புகைப்படங்களை எடுத்து ஏதோ தற்போது தான் நடைபெறுவது போல சித்தரித்து, சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். இதனால் மக்களிடையே குழப்பமும் பீதியும் ஏற்படுகிறது. இதுபோல சித்தரிக்கப்பட்ட பழைய வீடியோ, புகைப்படங்களை உண்மை தன்மையின்றி வெளியிடுபவர்கள் மீது, விசாரணை நடத்தி சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்று பரப்புவது சட்டப்படி தண்டிக்கத்தக்க குற்ற செயலாகும். மீறி சமூக வலைதளங்களில் பகிரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.