உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பா.ஜ.,வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால் நாட்டை சீர்குலைத்து விடுவர்; தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி

பா.ஜ.,வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால் நாட்டை சீர்குலைத்து விடுவர்; தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி

சேலம் : இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்க, சேலத்தில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் என, தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி தெரிவித்தார்.சேலம் லோக்சபா தொகுதியில், இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, ஓமலுார் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், திறந்த வேனில் சென்று தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார்.அப்போது, தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி பேசியதாவது: நமது இந்தியாவில் பல மொழிகள் பேசும் மக்கள் வாழ்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கும் தேசம். பல கலாச்சாரம், பல மதத்தை கொண்டுள்ள நாடு. இதனை சீர்குலைக்கும் வகையில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என பிரதமர் மோடி பேசி வருகிறார். நாட்டை மதத்தின் அடிப்படையில், மொழியின் அடிப்படையில் துண்டாக்கும் கட்சி பா.ஜ., அவர்களை தொடர்ந்து ஆட்சி செய்யவிட்டால் பாகிஸ்தான் போல அதிபர் நிலை தான் ஏற்படும்.சர்வாதிகாரம் தலை துாக்கிவிடும். எனவே அவர்களை மீண்டும் ஆட்சி செய்ய அனுமதிக்க கூடாது. தற்போது பிரதமர் மோடி ஆட்சியில் பல மாவட்டங்களில், ௧௦௦ நாள் வேலை திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. ஊதியமும் முறையாக வழங்கப்படுவதில்லை. இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்ததும், ௧௫௦ நாட்கள் ஏரி வேலை வழங்கப்படும். மேலும் ஒரு நாள் சம்பளமாக, ௪௦௦ ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் உறுதியளித்துள்ளார்.உலக நாடுகள் அனை த்தும் வியக்கும் வகையில், தமிழகத்தில் முதல்வர் நல்லாட்சி புரிந்து வருகிறார். குறிப்பாக, பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை பிற மாநிலங்களும் கனடா உள்ளிட்ட நாடுகளும் பாராட்டி பின்பற்றத் தொடங்கி விட்டன. இதேபோல் மகளிருக்கான, ௧,௦௦௦ ரூபாய் உரிமைத்தொகை, இலவச பஸ் பயணம் என எண்ணற்ற திட்டங்களை பெண்களுக்காக முதல்வர் வழங்கி வருகிறார்.தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் சமையல் காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீஸல் விலை குறைக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார். அத்துடன் இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். குறிப்பாக சேலம் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். எனவே, மத்தியிலும் மக்களுக்கான ஆட்சி ஏற்பட உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுப்போட வேண்டும். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை