சேலம், சேலம் மாவட்ட அளவில், வங்கிகளின் முதல் அரையாண்டு ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நேற்று நடந்தது.இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில், 236 பொதுத்துறை வங்கி கிளை, 199 தனியார் வங்கி கிளை, 117 கூட்டுறவு வங்கி மற்றும் கிராம வங்கி கிளை என, 552 கிளைகள் செயல்படுகின்றன. 2025 - 2026 முதல் அரையாண்டில் வேளாண், கல்வி கடன், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம் என பல்வேறு முன்னுரிமை திட்டங்கள் அடிப்படையில், 19,712 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.இந்த நிதியாண்டில் இதுவரை வேளாண், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 11,699 கோடி ரூபாய்; சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, 7,055 கோடி; மாணவர்களுக்கு கல்வி கடன், 59.79 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியன் வங்கி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 295 கோடி ரூபாய் கடன் வழங்கி முதலிடம் பிடித்துள்ளது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, 161 கோடி ரூபாய் கடன் வழங்கி, 2ம் இடம் பிடித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மேலும் கடந்த நிதியாண்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அதிக கடன் வழங்கிய இந்தியன் வங்கி மைக்ரோசாட்டின், ஓமலுார், அயோத்தியாப்பட்டணம், சேலம் கிளைகளுக்கு, கலெக்டர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். ரிசர்வ் வங்கி மேலாளர் வம்சிதர் ரெட்டி, ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் பிரித்திவிராஜ் சேத்தி, முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார், மாவட்ட தொழில் மைய மேலாளர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.