உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கூட்டுறவு சங்கங்களில் போலி நகைகளுக்கு கடன்? 100 சதவீத தணிக்கைக்கு உத்தரவு

கூட்டுறவு சங்கங்களில் போலி நகைகளுக்கு கடன்? 100 சதவீத தணிக்கைக்கு உத்தரவு

சேலம்,:சேலம் மண்டலத்தில், 204 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், தலா, 5 லேம்ப், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள அனைத்து வகை நகை கடன்கள், கடந்த ஜன., 31 வரை நிலுவையில் இருப்பதை, 100 சதவீத ஆய்வுக்கு உட்படுத்த, மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.அதற்கு அமைக்கப்பட்டுள்ள சார் - பதிவாளர், மத்திய கூட்டுறவு வங்கி ஆய்வாளர் அடங்கிய இருவர் குழு, சங்கத்துக்கு தொடர்பில்லாத நகை மதிப்பீட்டாளரை அழைத்துச்சென்று பரிசோதனை செய்ய வேண்டும். ஆய்வின்போது ஆவண அடிப்படையில் நகைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதா, அதற்கான ஆவணம், பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். கடன் வழங்க உரிய வழிமுறை பின்பற்றப்பட்டுள்ளதையும், உரிய பாதுகாப்பு பெட்டகத்தில் நகை இருப்பு வைக்கப்பட்டுள்ளதையும் கண்டறிய வேண்டும்.பரிந்துரைக்கப்பட்டதை விட, அதிக கடன் வழங்கப்பட்டுள்ளதா, விவசாய நகை கடனாக வைக்கப்பட்ட நகைகள், பயிர் கடன் ஆகியவை முன்னதாகவே மீட்கப்பட்டுவிட்டதா, கல் நகைக்கு உரிய எடை குறைவு செய்யாமல் கடன் வழங்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். 22 கேரட்டுக்கு குறைவான தங்க நகை, போலி நகைகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதா, அதன் ஆவணத்தில் விண்ணப்பதாரர், நகை மதிப்பீட்டாளர் கையெழுத்து இருப்பதை தெளிவுபடுத்த வேண்டும்.நகை பெட்டக சாவி, 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்படுகிறதா என்பதையும், அதற்கான ஆவணம் பராமரித்தல், குறிப்பாக அபாய மணி, அலாரம், 'சிசிடிவி' கேமரா, பாதுகாப்பு அறை, பாதுகாப்பு கதவுகள், இரும்பு பெட்டகம் சரியாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஒரே நபருக்கு அதிகபட்சம் எத்தனை இனங்களில் கடன் வழங்கப்பட்டுள்ளது, அவை முறையாக வசூலிக்கப்படுவதையும் சரிபார்க்க வேண்டும்.பெரிய அளவில் கண்டறியப்படும் குறைபாடுகளுக்கு சிறப்பு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் சரக துணைப்பதிவாளர், ஆய்வுக்குழு பொறுப்பேற்க நேரிடும்.இந்த அறிக்கை சேலம், ஆத்துார், ஓமலுார், சங்ககிரி துணைப்பதிவாளருக்கு, சம்பந்தப்பட்ட சங்கங்கள், தனித்தனியே அனுப்பி வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ