| ADDED : மார் 17, 2024 02:10 PM
இடங்கணசாலை: இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை நகராட்சி, 22வது வார்டு பாப்பாப்பட்டி, காட்டுவளவில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு, இரு மாதங்களாக குடிநீர் வினியோகம் இல்லை. இதனால், 2 கி.மீ., சென்று, அங்குள்ள காவிரி குடிநீர் இணைப்பில் குடிநீரை பிடித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள், நேற்று காலை, 11:45 மணிக்கு, பாப்பாப்பட்டி காட்டுவளவில், இளம்பிள்ளை - சின்னப்பம்பட்டி பிரதான சாலையில், காலிக்குடங்களை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மகுடஞ்சாவடி போலீசார், சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா, இடங்கணசாலை நகராட்சி கமிஷனர் சேம் கிங்ஸ்டன் பேச்சு நடத்தி, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.இதனால் மக்கள் மறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.