உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பருப்பு, பாமாயில் இல்லை; ரேஷன் நுகர்வோர் தவிப்பு

பருப்பு, பாமாயில் இல்லை; ரேஷன் நுகர்வோர் தவிப்பு

சேலம் : பருப்பு, பாமாயில், ரேஷன் கடைகளுக்கு குறைந்த அளவே வினியோகிக்கப்பட்டதால் பெரும்பாலான நுகர்வோர், கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.சேலம் மாவட்டத்தில், 1,258 முழு நேரம், 474 பகுதி நேரம் என, 1,732 ரேஷன் கடைகள் உள்ளன. அந்த கடைகள் மூலம், 10.74 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. அந்த கார்டுகளுக்கு மாதந்தோறும், 861 மெட்ரிக் டன் துவரம் பருப்பு; 912 மெட்ரிக் டன் பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.அந்த கடைகள், சேலம் பொன்னி, கூட்டுறவு பண்டகசாலை, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் செயல்படுகின்றன. அரசு மாதந்தோறும் முழு அளவில் கார்டுதாரர்களுக்கு பருப்பு, பாமாயில் ஒதுக்கீடு செய்வதில்லை என புகார் எழுந்துள்ளது. மே மாதத்தில் பாமாயில், பருப்பு, பாதி அளவில் கூட வரவில்லை. இரு வாரங்களாக பாமாயில், பருப்பு வழங்கப்படாததால், ரேஷன் பொருட்களை நம்பியுள்ள மக்கள் பரிதவித்து வருகின்றனர்.இதுகுறித்து மாவட்ட உணவு பொருள் வழங்கல் அலுவலர்கள் கூறுகையில், 'மாவட்டத்தில், 9 இடங்களில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு, 699 மெட்ரிக் டன் துவரம் பருப்பு வழங்க வேண்டும். ஆனால், 266 மெட்ரிக் டன் மட்டும் வந்துள்ளது. ஒரு லிட்டர் பாமாயில், 9.90 லட்சம் பாக்கெட் வழங்க வேண்டும். 3.53 லட்சம் பாக்கெட் மட்டும் வந்துள்ளது. பருப்பு, பாமாயில் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்' என்றனர்.உணவு பொருள் வழங்கல், நுகர்பொருள் வாணிப கிடங்கு அலுவலர்கள் கூறுகையில், 'பாமாயில், பருப்பு வினியோகம் செய்வதற்கு நியமித்த ஒப்பந்த நிறுவன பணிக்காலம் முடிந்துவிட்டது. தேர்தல் அறிவிப்புக்கு முன் புது நிறுவனம் நியமித்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால் பருப்பு, பாமாயில் வழங்க முடியவில்லை. இருப்பினும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ