உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து பழைய குழாய்களை மாற்ற உத்தரவு

குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து பழைய குழாய்களை மாற்ற உத்தரவு

ஆத்துார்: குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து பழைய குழாய்களை மாற்ற, ஊரக வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் பிருந்தாதேவி நேற்று ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:மாவட்டத்தில், 20 ஒன்றியங்களில், 385 ஊராட்சிகளில், 5,109 கிராமங்களில், 6.47 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. அதில், 5.40 லட்சம் குடியிருப்புகளுக்கு தனி நபர் இல்ல குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதி வீடுகளுக்கு டிசம்பருக்குள் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.மேல்நிலை, தரைமட்ட தொட்டிகள், 7,307, மினி தொட்டிகள், 4,632, கூட்டுக்குடிநீர், ஊராட்சி குடிநீருக்கு, 2,566 தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஊரக குடிநீர் இயக்க திட்டத்தில், 260 மேல்நிலை தொட்டிகள், நிதிக்குழு திட்டத்தில், 36 மேல்நிலை தொட்டிகள் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில், 72 தொட்டிகளின் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மீதி தொட்டிகளின் கட்டுமான பணிகளை, தரமான முறையில் மேற்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நகர், கிராம பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட சுகாதார குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சில நாட்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு பிரச்னைகளில், சிலர் மட்டும் சிகிச்சைக்கு வருகின்றனர். மேல்நிலை தொட்டி சுத்தம் செய்யப்பட்டு சுகாதார முறையில் குடிநீர் வினியோகிக்க வேண்டும். தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு உடைப்பு, துருப்பிடித்த பழைய குடிநீர் குழாய்களை மாற்றம் செய்ய, ஊரக வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னையில் வயிற்றுப்போக்கு பாதிப்பு எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி