| ADDED : ஜூலை 12, 2024 07:23 AM
சேலம்: சேலம் மாவட்டம் வலசையூரில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நேற்று தொடங்கப்பட்டது. அதில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் உள்ள வலசையூர், சுக்கம்பட்டி, குள்ளம்பட்டி, பூவனுார், குப்பனுார், ஆச்சாங்குட்டப்பட்டி மக்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், மனு வழங்க குவிந்தனர். மனுக்களை எழுத, பணியாளர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.ஆனால் முகாம் நடக்கும் இடத்தில் ஒருவர், 50 முதல், 100 ரூபாய் வரை வசூலித்து, மக்களுக்கு மனுக்களை எழுதிக்கொடுத்தார். இது சர்ச்சையை ஏற்படுத்த, நமது நிருபர், ஒன்றிய கமிஷனர் திருவேரங்கனிடம் விசாரித்தார். உடனே அங்கு சென்ற கமிஷனர், பணம் பெற்று மனு எழுதி கொடுத்தவரை, முகாம் நடக்கும் வளாகத்தில் இருந்து வெளியேற்றினார். அப்போது, மனு எழுத நியமிக்கப்பட்ட பணியாளர்கள், எழுதி தராததால் பணம் கொடுத்து எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக, மக்கள் தெரிவித்தனர்.