பனமரத்துப்பட்டி: பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு
போட்டியிட நிர்வாகிகள் தயங்குவதால், வேட்பாளர்களை தேடி பிடிக்கும்
நிலைக்கு, பா.ம.க., தள்ளப்பட்டுள்ளது. பனமரத்துப்பட்டி பேரூராட்சி தலைவர்
மற்றும், 2,10,14 ஆகிய வார்டு கவுன்சிலர் பதவிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1996ல் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து,
3வார்டுகளில் போட்டியிட்ட, பா.ம.க., இரண்டு வார்டில் வெற்றி பெற்றது. 13வது
வார்டு, பா.ம.க.,கவுன்சிலர் காளியப்பன் பேரூராட்சி துணை தலைவர் பதவி
வகித்தார். 2001ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., வுடன் கூட்டணி
அமைத்து, பா.ம.க.,போட்டியிட்டு தோல்வி அடைந்தது. அடுத்து, 2006ல்
தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, 4வார்டுகளில் போட்டியிட்ட, பா.ம.க.,
இரண்டு வார்டுகளில் வெற்றி பெற்றது. அப்போது, பேரூராட்சி தலைவர் பதவியை
கைபற்றிய, தி.மு.க., துணை தலைவர் பதவியை, பா.ம.க.,விற்கு தரமறுத்ததால்,
தி.மு.க.,- பா.ம.க., உறவில் விரிசல் ஏற்பட்டது. வரும் உள்ளாட்சி தேர்தலில்,
பா.ம.க., தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால், தலைவர்
மற்றும், 15 வார்டு கவுன்சிலர் பதவிக்கு கட்சி சார்பில் வேட்பாளர்களை
நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பா.ம.க.,வில் தாழ்த்தப்பட்ட மக்கள்
யாரும் இல்லாததால், தலைவர் மற்றும், 2,10,14 ஆகிய வார்டுக்கு வேட்பாளர்களை
நிறுத்த முடியாத நிலை உள்ளது. கடந்தமுறை பா.ம.க., போட்டியிட்ட நான்கு
வார்டுகளில், இந்த முறை போட்டியிட கட்சி நிர்வாகிகள் முன்வரவில்லை. கடந்த
முறை பா.ம. க., வெற்றி பெற்ற, 11வது வார்டில் மட்டும் போட்டியிட, இருவர்
சீட் கேட்டு விரும்ப மனு கொடுத்துள்ளனர். மற்ற வார்டுகளில் போட்டியிட
யாரும் முன்வராததால், பா.ம.க., மாவட்ட நிர்வாகிகள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர். பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் அனைத்து வார்டுகளிலும்
வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என, பா.ம.க., மாநில, மாவட்ட நிர்வாகிகள்,
பனமரத்துப்பட்டி ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர். இதனால்,
பா.ம.க., சார்பில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வேட்பாளர்களை
தேடி பிடிக்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.