ஓமலூர்: ஓமலூரில், பொய் வழக்கு போட்டு, நான்கு பேரை கைது செய்த
இன்ஸ்பெக்டரை கண்டித்து, வக்கீல்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பில்
ஈடுபட்டுள்ளனர்.ஓமலூர் குறிச்சி நகர், மேட்டூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர்
மோகன்குமார் (50); வக்கீலாக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த இன்னொரு வக்கீல்
மாதேஸ்வரன் மற்றும் சங்கர், சுப்ரமணி ஆகியோரின் வீடுகள் அடுத்தடுத்து
அமைந்துள்ளது. இந்த வீடுகளுக்கு செல்லும் வழி, மண் சாலையாக உள்ளதால்,
நால்வரும் சேர்ந்து, 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நேற்று முன்தினம் சிமெண்ட்
சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.அப்போது, சாலையில் விழும் நீர்,
அங்குள்ள போலீஸ் குடியிருப்பு நிலத்துக்கு செல்லும் வகையில் சாலை
அமைக்கப்பட்டது. அதற்காக, போலீஸ் நிலத்தில், மூன்றடிக்கு கான்கிரீட்
போட்டுள்ளனர். இதற்கு, போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு
தெரிவித்து, ஓமலூர் போலீஸிலும் புகார் செய்துள்ளனர்.இன்ஸ்பெக்டர் பாஸ்கரன்
சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது, பிரச்னையை
முடிவுக்கு கொண்டு வர, போலீஸ் நிலத்தில் போட்ட கான்கிரீட்டை
அப்புறப்படுத்தி உள்ளனர். இருப்பினும், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சட்ட
ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக மிரட்டியுள்ளார். தொடர்ந்து, அப்பகுதி
வி.ஏ.ஓ., முத்துராமசாமியிடம் புகார் பெற்று, வக்கீல் மோகன்குமார்,
சாலைப்போடும் பணியில் ஈடுபட்ட ஓமலூரை சேர்ந்த சுப்ரமணி, பச்சணம்பட்டி
கிராமத்தை சேர்ந்த குமார், வடமலை, மாதையன் ஆகிய ஐந்து பேர் மீது ஆறு
பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சுப்ரமணி, குமார் உள்பட நால்வரை கைது
செய்தார்.வி.ஏ.ஓ., பொய் புகார் கொடுத்ததாக வக்கீல் சங்கம் சார்பில்,
தாசில்தாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதால், வி.ஏ.ஓ.,வை நேரில் அழைத்து
விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், 'நால்வரும் யாரென்று தெரியாது.
போலீஸார் கட்டாயப்படுத்தியதால், புகார் எழுதிக் கொடுத்தேன். அங்கு நடந்த
சம்பவம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது' என, வி.ஏ.ஓ., தன்னிலை விளக்கம்
கொடுத்துள்ளார்.அதையடுத்து, மோகன்குமார் வக்கீல் சங்கத்தில் புகார்
தெரிவித்துள்ளார். கடந்த 26ல் ஓமலூர் வக்கீல்கள் சங்க அவசர கூட்டத்தில்,
வக்கீல்களை கேவலமாக பேசி, அவமானப்படுத்திய இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியாக
நடவடிக்கை எடுப்பதோடு, உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். அதுவரை,
காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு செய்வதென தீர்மானிக்கப்பட்டது.அதன்படி,
ஓமலூரில் வக்கீல்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நேற்று
துவக்கினர். நீதிமன்ற நுழைவு வாயிலில் நின்று, போலீஸாருக்கு எதிராக
கோஷமிட்டனர்.சர்ச்சையில் சிக்கிய இன்ஸ்பெக்டர்கடந்த 2002, டிசம்பர் 7ம்
தேதி கொண்டலாம்பட்டி பகுதியில், இரு டூவீலர்கள் மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது, எஸ்.ஐ.,யாக இருந்த பாஸ்கரன், இன்சூரன்ஸ் தொகை பெற, ஆள்மாறாட்டம்
செய்து வழக்குப்பதிவு செய்துள்ளார்.இது தொடர்பாக, யுனெடெட் இன்சூரன்ஸ்
நிறுவனம் நடத்திய விசாரணையில், ஆள்மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக, மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டு, 2005, ஜூலை
9ல், நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதில், 6வது
குற்றவாளியாக எஸ்.ஐ., பாஸ்கரன், சேர்க்கப்பட்டார். தற்போது, இவ்வழக்கு
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.எனினும், தன் செல்வாக்கை பயன்படுத்தி இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற
பாஸ்கரன், 2005, ஆகஸட் 27 முதல், 2008 ஜூலை 26ம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு
பிரிவில் பணியாற்றி வந்தார். அப்போது, விசாரணையின் போது, முறைகேடாகவும்,
முரண்பாடாகவும் செயல்படுவதாக அவர் மீது புகார் அனுப்பப்பட்டது. அதனால்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார். அங்கு, 2
மாதம் வேலை செய்தவர், செல்வாக்கை பயன்படுத்தி சேலம் மாவட்ட தனிப்பிரிவு
இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். அப்போது, ஜாதி ரீதியாக செயல்பட்டதாக, அவர்
மீது புகார் சென்றன. தற்போது, ஓமலூருக்கு மாற்றலாகி வந்தவர், பொய் வழக்கு
சர்ச்சையில் சிக்கியுள்ளார்.