உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய விவகாரம்: கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய விவகாரம்: கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி

சேலம்: இடங்கணசாலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று, இடங்கணசாலை நகராட்சி மக்கள் திரளானோர், சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, பா.ம.க.,வை சேர்ந்த, சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். போலீசார், அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.அப்போது மக்கள் கூறியதாவது: சின்னேரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதை குடியிருப்புகள் அருகே அமைக்க வேண்டாம் என, சுற்றுவட்டார கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். இருப்பினும் மீறி போலீஸ் பாதுகாப்புடன் பணி நடக்கிறது. அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து, 10 நாட்களுக்கு மேலாக வீடுகளில் கறுப்புக்கொடி கட்டியுள்ளோம். லோக்சபா தேர்தலை புறக்கணித்து, ஓட்டு கேட்டு வரும் கட்சியினரை ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம். கழிவுநீர் சுத்திகரிப்பு அமைக்கும் திட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றாவிட்டால், பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், கலெக்டரிடம் மனு கொடுக்க அறிவுறுத்தி அழைத்து சென்றனர். இதனால் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ