சேலம் : சேலம் அரசு மருத்துவ மனையில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, பாதுகாப்புக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க, கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு குறித்து, அரசு துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.இதில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது: புதிய, பழைய பஸ் ஸ்டாண்டுகளில், தற்காலிக கடைகள் அனுமதியின்றி நடத்தப்படுவதாகவும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் வந்த புகார் அடிப்படையில், மாநகராட்சி உதவி கமிஷனர் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழைய பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் வெளிவரும் பகுதியில் அதிக ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றை அகற்ற வேண்டும். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி காணாமல் போவதாக புகார் வந்துள்ளது.மருத்துவமனை நிர்வாகம், போதிய அளவு கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதோடு, பாதுகாப்பு பணிக்கு கூடுதல் பணியாளர்களை அமர்த்த வேண்டும். மாநகரில் தனியார், அரசு பஸ்கள், ஆட்டோ, டூவீலர் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விடவும், அதிவேகமாக சென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார், இரவு ரோந்து பணியை முறையாக கண்காணிப்பதுடன், குடியிருப்போர் நல சங்கங்களுடன் இணைந்து, அவர்கள் பகுதியில் தேவைக்கேற்ப கண்காணிப்பு கேமராக்களை பெருத்த நடவடிக்கை வேண்டும். இவ்வாறு கூறினார்.மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, எஸ்.பி., அருண்கபிலன், துணை கமிஷனர்கள் பிருந்தா, மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.