சேலம்: ''தனியார் மூலம் வீட்டு வரி வசூலிக்கப்படுகிறது. 200 ரூபாய்க்கு, 56,000 ரூபாய் வரி விதித்துள்ளனர்,'' என, அ.தி.மு.க., கவுன்சிலர் வரதராஜ் குற்றம்சாட்டினார்.சேலம் மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம் வருமாறு:தி.மு.க., கவுன்சிலர் தெய்வலிங்கம்: மாநகராட்சி திருமண மண்டபங்களில் ஊழியர்கள், அதிகாரிகளின் குடும்ப திருமணத்துக்கு கட்டணத்தில், 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுவது போல், கவுன்சிலர்களின் குடும்ப திருமணங்களுக்கு தள்ளுபடி வழங்க வேண்டும்.தி.மு.க., கவுன்சிலர் குணசேகரன்: கிச்சிப்பாளையம் சுடுகாட்டில் மின்மயானம் அமைக்க வேண்டும். அங்கு ஆக்கிரமிப்பை அகற்றி, எல்லை வரையறை செய்ய வேண்டும்.அ.தி.மு.க., கவுன்சிலர் வரதராஜ்: தனியார் மூலம் வீட்டு வரி வசூலிக்கப்படுகிறது. இதில், 200 ரூபாய் வரி விதிக்க வேண்டிய இடத்தில், 56,000 ரூபாய் விதித்துள்ளனர். இதனால் தினக்கூலிக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.மேயர்: எழுத்துப்பூர்வ புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறேன்.எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி: அதிகாரிகளை ஆளுங்கட்சியினர் மிரட்டி காரியம் சாதிக்கின்றனர்.அப்போது தி.மு.க., கவுன்சிலர்கள், யாதவமூர்த்தியை முற்றுகையிட்டு பேச விடாமல் தடுத்தனர்.மேயர்: யாரையும் யாரும் மிரட்ட முடியாது. யாதவமூர்த்தி: என் வார்டுக்கு தேவையின்றி வரும் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., தேவையில்லாத தகவல்களை பரப்புகிறார்.இதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.கமிஷனர் பாலச்சந்தர்: தனிப்பட்ட புகார், கட்சி தொடர்பான குற்றச்சாட்டுகள் இங்கு வேண்டாம். யாதவமூர்த்தி: வ.உ.சி., மார்க்கெட், 9.75 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இதனால் கடைக்காரர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒரு கடைக்கு, 20 லட்சம் ரூபாய் வரை வாடகை கேட்கின்றனர். மாநகராட்சியே டெண்டரை ரத்து செய்து விட்டு நேரடியாக வசூலிக்க வேண்டும். வணிக வளாகங்கள், பெரியார் அங்காடி, வாகன நிறுத்தும் இடங்கள், ஒப்பந்தம் விடப்படாமல் உள்ளதால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தனிநபர்கள் வசூலித்து ஊழல் செய்கின்றனர்.தொடர்ந்து அவரது பேச்சுக்கு, தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.பின் யாதவமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்களை பேச அனுமதிப்பது இல்லை. குடிநீரில் முறைகேடு செய்யப்பட்டு வருகிறது. முன்பு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இப்போது அப்படி இல்லை. மாதத்துக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு குளோரின் வாங்கப்படுவதிலும் ஊழல் நடக்கிறது. இதற்கு, அ.தி.மு.க., துணை போகாது. அதனால் வெளிநடப்பு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.