மோகனுார் : ''வரும் கல்வியாண்டில், 100 சதவீதம் தேர்ச்சி பெற ஆசிரியர், மாணவர்கள் இடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த வேண்டும்,'' என, நாமக்கல் கலெக்டர் உமா உத்தரவிட்டார்.மோகனுார் ஒன்றியத்தில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2.30 கோடி ரூபாய் மதிப்பில், மோகனுார் - ராசிபுரம் முதல், மோகனுார் - வளையப்பட்டி வரை தார்சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளை, நாமக்கல் கலெக்டர் உமா ஆய்வு செய்தார். தொடர்ந்து, மோகனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாதிரி பள்ளி அமைப்பதற்கு ஏதுவாக, போதுமான இடம் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.மேலும், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், குறைந்த சதவீதம் தேர்ச்சி பெற்றதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். அப்போது, வரும் கல்வியாண்டில், 100 சதவீதம் தேர்ச்சி அடைவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என, கலெக்டர் உமா உத்தரவிட்டார்.இதையடுத்து, ப.வேலுார் தாலுகா, வடகரையாத்துார், மேல்முகம் பகுதியில் பட்டா வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பரமத்தி ஒன்றியம், கோதுாரில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 89 லட்சம் ரூபாய் மதிப்பில், கோதுார் முதல் உத்திகாபாளையம் வரை மேற்கொள்ளப்பட்டுள்ள தார் சாலை மேம்பாட்டு பணிகளையும் ஆய்வு செய்தார்.