உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ராமானுஜர் மணி மண்டபத்தில் திருப்பவித்ர உற்சவம் கருடசேவை, தீர்த்தவாரியுடன் நிறைவு

ராமானுஜர் மணி மண்டபத்தில் திருப்பவித்ர உற்சவம் கருடசேவை, தீர்த்தவாரியுடன் நிறைவு

சேலம்., சேலம் ராமானுஜர் மணி மண்டபத்தில் உள்ள, பெருமாள் கோவில்களில் நடந்து வந்த, திருப்பவித்ர உற்சவம் நேற்று கருடசேவை, தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.சேலம், எருமாபாளையம் ராமானுஜர் மணிமண்டப வளாகத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருப்பதி வெங்கடாஜலபதி, காஞ்சீபுரம் வரதராஜர் மற்றும் மேல்கோட்டை சம்பத்குமாரன் ஆகிய நான்கு திவ்யதேச பெருமாள்களும், நான்கு திசைகளில் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.இக்கோவில்களின், 8ம் ஆண்டு திருப்பவித்ர உற்சவம் கடந்த, 21ல் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நிறைவு நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு திருப்பவித்ர உற்சவத்தின் பிரதான யாகம் நடத்தப்பட்டது. பின், கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷங்கள் முழங்க, மணிமண்டபத்தை வலம் வந்து அருள்பாலித்தார். தொடர்ந்து பட்டாச்சாரியார்கள், வேதமந்திரங்கள் முழங்க உற்சவ பெருமாளை ஏந்தியபடி, கோவில் தாமரை குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடத்தினர். பின்னர் அனைத்து யாகங்களும் மகா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது. மதியம் 12:00 மணி வரை கோஷ்டியார்களின் சாற்றுமுறை, பக்தர்களின் பஜனை, நாம சங்கீர்த்தனங்களுடன் திருப்பவித்ர உற்சவம் நிறைவடைந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகள் ஸ்ரீ பகவத் ராமானுஜ கைங்கர்ய சொசைட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !