உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெப்பத்தால் கோழிகள் இறப்பை தடுக்க ஆலோசனை

வெப்பத்தால் கோழிகள் இறப்பை தடுக்க ஆலோசனை

பனமரத்துப்பட்டி : சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள், இணை பேராசிரியர் ரவி, வானிலை உதவியாளர் பிரபாகரன் ஆகியோர், வானிலை முன்னறிவிப்பின்படி, 'கோழிகளும் கோடைகாலமும்' தலைப்பில் ஆலோசனை வழங்கியுள்ளனர்.இதுகுறித்து அவர்களது அறிக்கை: அதிக வெப்பநிலை, கோழிகளில் வெப்ப அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. சுற்றுச்சூழலின் வெப்பநிலை, 35 டிகிரி செல்சியசுக்கு மேல் செல்லும்போது பறவைகள் வெப்ப அழுத்தத்துக்கு ஆளாகின்றன. கோழிகளின் நாக்கு உலர்ந்து, ரத்த அளவு குறைந்து, இதய துடிப்பு அதிகரித்து, ரத்த நாளங்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் குறைந்து, மூச்சு திணறல் ஏற்பட்டு, நரம்பு மண்டலம், சுவாச மண்டலம், ரத்த ஓட்டம் முற்றிலும் செயல் இழந்து கோழிகள் உடனே இறந்துவிடும்.வெப்ப அழுத்தத்தின் போது குறைந்த தீவனம், அதிக தண்ணீர் உட்கொள்ளும். உடல் எடை, முட்டை உற்பத்தி, முட்டையின் எடை, தரம் ஆகியவற்றில் வெப்ப அழுத்தம் தாக்கத்தை ஏற்படுத்தும். கொட்டகையில் ஓலைகள் கொண்டு கூரை அமைத்தல் அல்லது வெப்பம் பிரதிபலிப்பு சாயங்கள் பூசுதல், மின்விசிறிகள், நீர் தெளிப்பான்கள், குளிரூட்டும் அமைப்புகள் கொண்டு காற்றோட்டத்தை அதிகரித்தல் வெப்பமான காலநிலையைத் தாங்க உதவும்.நீர், ஊட்டச்சத்து மேலாண்மைதண்ணீர், உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தி உள் உறுப்புகள் வளர்ச்சி அடைவதற்கும் மற்றும் கழிவை வெளியேற்றுவதற்கும் உதவுகிறது. தண்ணீரின் தேவை கோடை காலத்தில் மிக அவசியம். வழக்கத்தை விட கூடுதலாக இக்காலகட்டத்தில் கொடுக்கவேண்டும். குளிர்ந்த நீரை வழங்க வேண்டும். குடிநீர் குடிப்பான்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், எலக்ட்ரோலைட்டுகள், வைட்டமின் சி, பி, வைட்டமின் ஈ, ஆஸ்பிரின் போன்ற நீர் சேர்க்கைகள் பயன்படுத்தல் வெப்ப அழுத்தத்தை தணிக்க உதவுகிறது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, உயிர் பாதுகாப்பு, தடுப்பூசி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அமினோ அமிலங்கள், கால்சியம், சோடியம், பாஸ்பரஸ் அல்லது வைட்டமின்கள், நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்து மூலம் சரிவிகித உணவை அளிப்பது முக்கியம். குறைந்த தீவனம் உட்கொள்வதை ஈடுசெய்ய தீவனத்தில் முக்கிய ஊட்டச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடர்த்தியாக இருக்க வேண்டும். ஜீரணிக்க கூடிய அமினோ அமில அளவை அதிகரிப்பதுடன் தீவனத்தில் புரதத்தின் அளவை குறைக்க வேண்டும்.வெப்பமான காலநிலையில் வைட்டமின் ஏ, சி, ஈ ஆகியவற்றை சேர்ப்பது முட்டை உற்பத்தி, கருவுறுதலை அதிகரிக்கிறது. அத்துடன் முட்டை உடைப்பு, இறப்பை குறைக்க உதவும். வைட்டமின்கள், தாதுக்களின் கலவையானது கோழிகளுக்கு வெப்ப அழுத்தத்தின் விளைவை குறைப்பதில் ஒருங்கிணைந்த விளைவை கொண்டுள்ளது. வெப்ப அழுத்தத்தின்போது எலக்ட்ரோலைட்டுகளின் வெளியேற்றம் அதிகரிக்கிறது. இந்த இழப்பை சமன் செய்வதில் பொருத்தமான எலக்ட்ரோலைட் உப்புகளை சேர்ப்பது அவசியம்.வெப்ப அழுத்தத்தில் உடலில் நீர் இழப்பு அதிகம் உள்ளது. ஆஸ்மோலைட்டுகளை நிரப்புவது உடலின் நீர் சமநிலையை பராமரிப்பதில் துணைபுரிகிறது. இது உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் கோடை கால வெப்ப அயர்ச்சியை தவிர்த்து கோழி இறப்பதை தடுத்து லாபம் ஈட்டலாம். விபரம் பெற, திட்ட ஒருங்கிணைப்பாளரை,0427 242 2550, 90955 13102 என்ற எண்களில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை