சேலம் : ஜல்ஜீவன் திட்டத்தை செயல் படுத்தியதில், தேசிய அளவில் முதலிடம் பெற்ற, சேலம் கலெக்டரை, அமைச்சர் நேரு பாராட்டினார்.சேலம் மாவட்டத்தில் உள்ள, 385 ஊராட்சிகளுக்குட்பட்ட, 5,109 குக்கிராமங்களுக்கும், ஊரக குடிநீர் இயக்க திட்டம், ஒருங்கிணைந்த, 14 வது மற்றும் 15வது நிதிக்குழு ஆகிய திட்டங்களின் மூலம் மொத்தம் உள்ள ஆறு லட்சத்து, 47 ஆயிரத்து, 476 வீடுகளில், இதுவரை ஐந்து லட்சத்து, 40 ஆயிரத்து, 905 வீடுகளுக்கு தனிநபர் இல்ல குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 72 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் தேசிய அளவில், 86.44 புள்ளிகள் பெற்று, சேலம் மாவட்டம் முதலிடம் பெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் நடந்த கலெக்டர்கள் ஆய்வுக்கூட்டத்தில், இதற்கான சான்றிதழ், கலெக்டர் பிருந்தாதேவியிடம் வழங்கப்பட்டது. சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் நேருவிடம், கலெக்டர் பிருந்தாதேவி நேற்று சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். கலெக்டர் மற்றும் துறை அலுவலர்களை அமைச்சர் பாராட்டினார். எம்.பி., செல்வகணபதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.