உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பஸ் ஸ்டாப் இல்லாததால் உழவர் சந்தை வெறிச் பிஸியாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா?

பஸ் ஸ்டாப் இல்லாததால் உழவர் சந்தை வெறிச் பிஸியாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா?

வாழப்பாடி : பஸ் ஸ்டாப் இல்லாததால் வெறிச்சோடிய உழவர் சந்தையை, 'பிஸி'யாக மாற்ற, அரசு நடவடிக்கை எடுக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி, அதன் சுற்றுப்பகுதியில் உள்ள, 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய மையமாக உள்ளது. சுற்றுப்புற கிராம மக்கள், விவசாய விளைபொருட்களை விற்கவும், அத்யாவசிய பொருட்களை வாங்கவும், தினமும் வாழப்பாடிக்கு வந்து செல்கின்றனர். ஆனால் கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறி, கீரை, பூ உள்ளிட்டவற்றை விவசாயிகள் நேரடியாக நுகர்வோருக்கு விற்க வசதியாக, வாழப்பாடியில் உழவர் சந்தை அமைக்க, விவசாயிகள், மக்கள், பல ஆண்டாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனால் தமிழக அரசின் வேளாண் விற்பனை, வணிகத்துறை மூலம், வாழப்பாடியில் கடலுார் சாலையில், 50 லட்சம் ரூபாய் செலவில் உழவர் சந்தை அமைக்கப்பட்டது. கடந்த மார்ச், 11ல், முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம், உழவர் சந்தையை திறந்து வைத்தார். பயன்பாட்டுக்கு வந்து, 2 மாதங்களுக்கு மேலாகியும், 16 கடைகளில், 4 காலியாக உள்ளது. நுகர்வோரும் அதிகளவில் வராததால் பெரும்பாலான நேரங்களில் வெறிச்சோடி காணப்படுகிறது.இதுகுறித்து வாழப்பாடியை சேர்ந்த நுகர்வோர் சேகர், 43, கூறுகையில், ''வெளியே வாங்குவதை விட உழவர் சந்தையில் காய்கறி விலை குறைவாக உள்ளது. ஆனால் போதிய காய்கறி கிடைப்பதில்லை. தொலைவில் உள்ளதால் வந்து செல்லவும் சிரமமாக உள்ளது,'' என்றார்.வாழப்பாடியை சேர்ந்த நுகர்வோர் அன்புரோஸ், 53, கூறுகையில், ''குடியிருப்புகளுக்கு தொலைவில் உள்ளதால் போக்குவரத்து வசதி முக்கியம். இதனால் நுகர்வோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தி, விற்பனையை அதிகரிக்க வேண்டும்,'' என்றார்.சந்தையில் கடை வைத்துள்ள, வடக்கு காட்டை சேர்ந்த வியாபாரி முத்துகிருஷ்ணன், 42, கூறுகையில், ''குடியிருப்பு பகுதிகளில் இருந்து சந்தை தொலைவில் உள்ளதால் வாகனங்களில் மட்டும் நுகர்வோர் வரும் நிலை உள்ளது. சந்தை முன் பஸ் ஸ்டாப் அமைத்தால் பயனாக இருக்கும். வேகத்தடையும் அமைத்தால், அனைத்து வாகனங்களும் மெதுவாகச்செல்லும். இதன்மூலம் நுகர்வோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?சந்தையில் கடை வைத்துள்ள, மத்துாரை சேர்ந்த வியாபாரி சந்திரன், 65, கூறுகையில், ''சந்தையில் விலை குறைவாக, புதிதாக கிடைக்கும் என, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக வாழப்பாடி சுற்றுவட்டார கிராமங்களில் உழவர் சந்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நுகர்வோர் வருகையை அதிகரிக்க வேண்டும். மேலும் சந்தையில் போதிய காய்கறி இல்லை. இதனால் கடைகளை அதிகப்படுத்த வேண்டும். குளிர் பதன கிடங்கும் அவசியம்,'' என்றார்.உழவர் சந்தை நிர்வாக அலுவலர் கூறுகையில், 'விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் சரியாகி விடும்' என்றார்.வேளாண் அலுவலர் காயத்ரி கூறுகையில், ''சந்தை முன் பஸ் ஸ்டாப் கேட்கப்பட்டுள்ளது. உழவர்களுக்கு கார்டு வழங்கி, 16 தற்காலிக கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. பின் நிரந்தரமாக கடைகள் அதிகரிக்கப்படும்.மழையின்றி காய்கறி விளைச்சல் குறைந்துள்ளதால், உழவர் வர முடியாத சூழல் உள்ளது. வாகனங்களில் துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. ஓரிரு மாதங்களில் சரியாகிவிடும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்