காரைக்குடி : பசு,ஆடு வளர்ப்பை ஊக்கப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடத்த வேண்டுமென,வேளாண் துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, காளையார்கோவில், சிங்கம்புணரி பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெள்ளாடு ஆடுகள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளன. தவிர, ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் செம்மறி ஆடுகள் வளர்ப்பும் அதிகளவு உள்ளன. தற்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசு தேர்தல் அறிக்கையில் கூறியது போல், குடும்பத்திற்கு பசுமாடு, ஆடுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தீவிர பணியில் ஈடுபட்டுள்ளன.
இத்திட்டத்தை செப்., 15ம் தேதி துவங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. முன்னோடியாக, மாவட்டந்தோறும் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள், ஆடுகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு பணியில் வேளாண் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இம்மாவட்டத்தை பொறுத்தவரை ஆடு வளர்ப்பில் விவசாயிகள் அதிகளவு ஆர்வம் செலுத்தாததால் இத்தொழிலை ஊக்கப்படுத்தும் பணியில் வேளாண் துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர். முதற் கட்டமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் விவசாய தொழிலாளிகள், ஆடு வளர்ப்போர், கூலி தொழிலாளிகள் என அனைவரையும் அழைத்து ஆடு வளர்ப்பிற்கு தேவையான உதவிகளையும், பசுந் தீவன உற்பத்தி பற்றியும் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளனர்.
வேளாண் உதவி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், '' புதிய அரசு மாவட்டந்தோறும் பசுமாடு, ஆடு வளர்ப்பை ஊக்குவிக்க பயிற்சி வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பருவ நிலைக்கு ஏற்ப ஆடுகளை எவ்வாறு வளர்ப்பது, நோய் மற்றும் தடுப்பு முறைகள், மாவட்டத்திற்கு தகுந்தவாறு ஆடுகளை வளர்ப்பது உள்ளிட்ட ஆலோசனை வழங்கப்படவுள்ளன. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். '' என்றார்.