சிவகங்கை:உள்ளாட்சி தேர்தலுக்காக நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகளில் வேட்பு மனு தாக்கலுக்கு வரும் கட்சியினர் கட்டுப்பாடின்றி வருவதால் நெரிசல் ஏற்படுகிறது.மாவட்டத்தில், மூன்று நகராட்சி, 12 ஊராட்சி ஒன்றியம், 12 பேரூராட்சிகள், 16 மாவட்ட கவுன்சில் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் வாங்கப்படுகிறது. இன்று அமாவாசை என்பதால், அ.தி.மு.க.,- தி.மு.க., உட்பட பெரும்பாலான கட்சிகள் அதிகளவில் வேட்பு மனு தாக்கல் செய்வர். இதற்காக அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தொய்வு: பாதுகாப்பில் உள்ள போலீசார் அந்தந்த தேர்தல் அலுவலர்கள் குறிப்பிடும் எண்ணிக்கையிலான ஆட்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஆனால், கட்டுப்பாடுகளை மீறி அதிகளவில் கட்சியினரை அனுமதிக்கின்றனர். மேலும், பாதுகாப்பில் அக்கறையின்றி போலீசார் செயல்படுகின்றனர். இதனால் நெரிசல் ஏற்படுகிறது.பெண் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யமுடியாமல் அச்சமடைகின்றனர். எனவே, பாதுகாப்பில் உள்ள போலீசார் தொய்வின்றி, தேர்தல் விதிப்படி வேட்பாளருடன் கட்சியினரை அனுமதிக்கவேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் அதிக பட்சம் 5 பேர் மட்டுமே வரவேண்டும். இதை நாங்கள் போலீசாரிடம் தெரிவித்துவிட்டோம். ஆனால், மனுக்கள் வாங்க வருவதாக கட்சியினர் நுழைந்து அலுவலகங்களுக்குள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இதை போலீசார் கட்டுப்படுத்தினால் தான் கூச்சல் குழப்பத்தை தவிர்க்கலாம் என்றார்.