சிவகங்கை : சிவகங்கை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் இளநிலை பிரிவுகளில் மொத்தமுள்ள 748 இடங்களுக்கு 10,082 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ் இலக்கிய பாடப்பிரிவில் சேர மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் 2024 - -2025 ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் கட்ட கலந்தாய்வின் மூலம் மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், கணினி அறிவியல், மனையியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு திங்கள் கிழமை கலந்தாய்வு நடத்தி தகுதியுள்ள மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். நேற்று வணிகவியல் (பி.காம்), வர்த்தக (பி.பி.ஏ.,) நிர்வாகவியல், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது.மாற்றுத் திறனாளி, விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர், தேசியமாணவர் படை, பாதுகாப்பு படையினர், அந்தமான் மற்றும் நிகோபர் ஆகிய சிறப்பு ஒதுக்கீடு பிரிவுகளுக்காக 181 பேர் விண்ணப்பித்தனர்.இவர்களுக்கான கலந்தாய்வு மே 28ல் நடத்தப்பட்டது.இதில், தமிழ் இலக்கியத்தில் 60 இடங்களுக்கு 1,175 பேர் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுப்பாடங்களுக்காக ஷிப்ட் - 1 மற்றும் ஷிப்ட் - 2 பயில்வதற்காக, தமிழ் இலக்கிய பாடத்துக்கு 1,175 மாணவிகள், ஆங்கிலம் 570, வரலாறு 444, கணிதம் 389, இயற்பியல் 456, வேதியியல் 880, தாவரவியல் 782, விலங்கியல் 914, கணினி அறிவியல் 714, மனையியல் 330, வணிகவியல் 693, வணிக மேலாண்மை 743, பொருளாதாரம் 574 மாணவிகள் என ஷிப்ட்- - 1 -ல் 8,664 மாணவிகளும், ஷிப்ட்- - 2ல் 1,418 மாணவிகளும் என மொத்தம் 10,082 மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.