| ADDED : மே 09, 2024 05:29 AM
காரைக்குடி: சிவகங்கை உட்பட பலபகுதிகளிலும் நடக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணியால், பி.எஸ்.என்.எல்.,கேபிள் துண்டிக்கப்பட்டு சேவை பல மணி நேரத்திற்கும் மேலாக தடைபடுவது தொடர்கதையாகி வருகிறது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம் ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து காரைக்குடியில் பி.எஸ்.என்.எல்., துணை மேலாளர் அலுவலகம் செயல்படுகிறது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், 1.5 லட்சம் அலைபேசி வாடிக்கையாளர்களும் 8 ஆயிரம் லேண்ட் லைன் இணைப்புகளும் 18 ஆயிரம் பைபர் நெட் இணைப்புகளும் உள்ளது. மாவட்டம் முழுவதும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக பள்ளம் தோண்டும் போது கேபிள்கள் துண்டிக்கப்படுவதால் பி.எஸ்.என்.எல். சேவை தடைபடுவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்ட போது சிவகங்கை திருப்பத்தூர் காளையார்கோயில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பி.எஸ்.என்.எல். இணைப்பு துண்டிக்கப்பட்டது. பல மணி நேரம் சேவையை பெற முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர். அதிகாரிகள் கூறுகையில், குழாய் பதிக்கும் பணியின்போது கேபிள்கள்துண்டிக்கப்பட்டதால் காளையார்கோவில், திருப்புத்துார், சிவகங்கை பகுதியில் சேவை துண்டிக்கப்பட்டது. காளையார் கோவிலில் சரி செய்யப்பட்டு விட்டது. திருப்புத்துார், சிவகங்கையில் இணைப்பு சரி செய்யும் பணி நடந்து வருகிறது.