| ADDED : ஜூன் 03, 2024 03:12 AM
சிவகங்கை: சிவகங்கையில் ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகள் மற்றும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கும்போது விபத்து ஏற்படும் அச்சம் இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.சிவகங்கை ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகள் மற்றும் குதிரைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தொண்டி ரோடு ரயில்வே பாலத்தின் அடிப்பகுதி, பஸ் ஸ்டாண்ட், அரண்மனைவாசல், மதுரை முக்கு, நேருபஜார், மஜித்ரோடு, காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. அதேபோல் கலெக்டர் வளாகம், திருப்புத்துார், மேலுார் ரோடு பகுதியில் குதிரைகள் சுற்றி திருகின்றன. இவைகள் ரோட்டிலேயே படுத்து விடுவதால், வாகனங்களில் செல்வோர் மாடுகள் இருப்பது தெரியாமல், மோதி விபத்திற்குள்ளாகும் நிலை ஏற்படுவதாக அஞ்சுகின்றனர்.இதனால் அரண்மனைவாசல் பகுதியில் போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது. ரோட்டில் திரியும் மாடு, குதிரைகளை அதன் உரிமையாளர்கள் பிடித்து செல்ல வேண்டும். நகராட்சி நிர்வாகம் இதில் தனி கவனம் செலுத்தி, ரோட்டில் திரியும் இவற்றை பிடித்து அடைத்து வைக்க வேண்டும்.