| ADDED : மே 16, 2024 06:21 AM
திருப்புத்துார்,: திருப்புத்துார்-மதுரை ரோட்டில் பறவைகள் சரணாலயம் அருகே சாலை அபிவிருத்திப்பணி தாமதமாகிறது. சரணாலய மேம்பாடு நிதி அனுமதி தாமதமாவதால் ரோடு பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் மேலுாரிலிருந்து சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் வரை உள்ள நெடுஞ்சாலை சென்னை -கன்னியாகுமரி தொழிற் வடச்சாலையின் கீழ் விரிவுபடுத்தி, வடிகால் வசதியுடன் இருவழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டது. வழியில் உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் பகுதியில் பறவைகள் வலசை போதல் காரணமாக ரோடு புதுப்பிப்பு பணி ஒத்தி வைக்கப்பட்டது. ரோடு பராமரிப்பின்றி உள்ள பகுதியில் சிறு, சிறு பள்ளங்கள் ஏற்பட துவங்கியுள்ளன. பகலில் சமாளித்து செல்லும் வாகன ஓட்டிகள்இரவில் பள்ளத்தில் வாகனத்தை செலுத்தி தடுமாறி விபத்தை சந்திக்கின்றனர். இதனால் நெடுஞ்சாலைத்துறையினர் விரைவாக ரோட்டை புதுப்பிக்க கோரிக்கை எழுந்தது.சரணாலய மண்டலப்பகுதியில் இந்த ரோடு வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்காமலிருக்கவும், சரணாலய மேம்பாட்டிற்காகவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ரூ.9 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அனுமதி கோரப்பட்டது. கண்மாய் மதகுகள் சீரமைப்பு, துார் வாரி ஆழப்படுத்துதல், சிறுவர் பூங்கா சீரமைப்பு, மேலிக்கண்மாயிலிருந்து கூடுதல் வரத்துக்கால்வாய், சீமைக்கருவை அழித்து, நாட்டுக்கருவை மரங்கள் வளர்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு நிதிகோரப்பட்டது. ஆனால் அதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. இதனால் ரோடு பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது வலசை போதல் காலம் முடிந்து கோடை நடந்து வருகிறது. இந்நிலையில்ரோடு புனரமைப்பு பணிகள் விரைவில் துவக்கினால் சரியாக இருக்கும். மழை காலம் துவங்கி விட்டால் பறவைகள் வலசை போதல் துவங்கி விட்டால் இந்த ஆண்டும் ரோடு பணிகள் முழுமையடையாது. வனத்துறையினர் பணிகளுக்கு ஆசியன் அபிவிருத்தி வங்கி மூலம் நிதி அனுமதியை தேசியநெடுஞ்சாலை ஆணையத்தினர் விரைவுபடுத்தி, சாலைப்பணிகளையும் விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.