| ADDED : ஜூன் 09, 2024 05:12 AM
சிவகங்கை : கருணை அடிப்படை பணி நியமன பறிப்பை கண்டித்து மாநிலம் முழுவதும் உள்ள வட்டக்கிளைகளில் ஜூன் 27ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாநில தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்து தெரிவிக்கையில், கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி நியமனம் செய்வதற்கு மறைமுக தடை விதித்த தமிழக அரசை கண்டித்தும், பணி நியமனத்திற்கான தடையை நீக்க கோரியும் ஜூன் 27 அன்று அனைத்து வட்டக்கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம், பெறுபவர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜூலை 13 அன்று அனைத்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு அளிக்க முடிவெடுத்துள்ளோம். ஆக. மாதத்தில் வட்டக்கிளை மாநாடு நடத்துவது, செப். மாதத்தில் மாவட்ட மாநாடுகளை நடத்துவது, அக். 5 மற்றும் 6ம் தேதிகளில் கரூரில் முதலாம் மாநில மாநாட்டை நடத்துவது என முடிவு செய்துள்ளோம் என்றார். பொதுச் செயலாளர் லெட்சுமி நாராயணன், மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் உடன் இருந்தனர்.