உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆடியில் கனவு இல்லம் திட்ட வீடுகளைகட்ட முன்வராத பயனாளிகளால் திணறல்

ஆடியில் கனவு இல்லம் திட்ட வீடுகளைகட்ட முன்வராத பயனாளிகளால் திணறல்

சிவகங்கை:தமிழக அரசின் கனவு இல்லத்தை ஆடி மாதத்தில் கட்டுவதற்கு பயனாளிகள் முன்வராததால் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.தமிழக அரசு கனவு இல்லம் திட்டம் மூலம் இந்தாண்டு ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட திட்டம் வகுத்துள்ளது. 8 லட்சம் வீடுகளை கட்டி குடிசை இல்லாத மாநிலமாக தரம் உயர்த்தும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கனவு இல்லம் திட்டத்தில் சொந்த நிலம், பட்டா வைத்துள்ள கூரைவீடுகளுக்கு பயனாளிக்கு அரசு சார்பில் தலா ரூ.3.50 லட்சம் வழங்கப்படுகிறது. இது தவிர மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில் கடனுதவியும் அளிக்கப்படுகிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும் பயனாளிகளை தேர்வு செய்து வீடு கட்ட அனுமதி உத்தரவை அந்தந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் வழங்கவுள்ளனர். இதற்கிடையில் ஆடி மாதமாக இருப்பதால் புதிதாக வீடு கட்ட பயனாளிகள் ஆர்வம் காட்டவில்லை என புகார் எழுந்துள்ளது. தற்போதுள்ள குடிசை வீட்டை காலி செய்து வாடகை வீட்டில் குடியேற வேண்டும். அதுவும் ஆடி மாதத்தில் செய்ய முடியாது. கனவு இல்லம் திட்டத்தில் புதிதாக வீடு கட்டுமான பணியையும் துவக்கவில்லை. இது போன்ற காரணத்தால் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது: கனவு இல்ல திட்டத்தின் மூலம் பயனாளிக்கு நன்செய், புன்செய் இல்லாத சொந்த நிலம், பட்டாவுடன் குடிசை வீடு வைத்திருக்க வேண்டும். பெரும்பாலான குடிசையில் வசிப்பவர்கள் முன்னோர் வாழ்ந்த வீட்டில் தான் வசிப்பர். அக்காலத்தில் நிலங்களுக்கு பட்டா வாங்கியிருக்க மாட்டார்கள். சொந்த நிலமாக இருப்பினும் பட்டா இல்லாத காரணத்தால் கனவு இல்லம் திட்டத்தில் பயன்பெற முடியாத நிலை ஏற்படுகிறது. வீடு கட்ட அனுமதி கடிதம் வழங்கிய பின் அடுத்த 15 நாட்களுக்குள் முதற்கட்டமாக தரைத்தள கட்டுமான பணிகளை முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர். ஆடியில் வீடு கட்டும் பணியை செய்யவே பயனாளிகள் விரும்பவில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி