| ADDED : ஆக 22, 2024 02:42 AM
காரைக்குடி: காரைக்குடி வேடன்நகரில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரிக்கை விடுத்து வந்தனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காரைக்குடியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் கலெக்டர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், 106 நரிக்குறவர் இன குடும்பத்திற்கு பட்டா வழங்கப்பட்டது.பட்டா வழங்கப்பட்டதோடு சரி, தங்களுடைய இடம் எங்கே உள்ளது என்பது கூட தெரியாது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, தாசில்தார் ராஜா தலைமையில் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு இடங்களை ஒப்படைக்கும் வகையில் திருவேலங்குடி பைபாஸ் அருகே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், கல் ஊன்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் இடம் ஒப்படைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.தங்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தை, தங்களுக்கு வழங்கக் கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக அறிந்த மக்கள் நேற்று காரைக்குடி தாலுகா அலுவலகம் வந்தனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விரைவில் வழங்க வேண்டும் என தாசில்தாரிடம் கோரிக்கை விடுத்தனர். தாசில்தார் ராஜா கூறுகையில்: அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து, கல் ஊன்றும் பணி நடைபெறுகிறது. விரைவில் அனைத்து பணிகளும் முடிந்து இடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.