உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குறைதீர் மனுக்கள் மாயம்; கலெக்டர் அதிரடி நடவடிக்கை

குறைதீர் மனுக்கள் மாயம்; கலெக்டர் அதிரடி நடவடிக்கை

சிவகங்கை : சிவகங்கை குறைதீர் கூட்டத்தில் மக்கள் வழங்கும் மனுக்களை துறை அதிகாரிகள் தொலைந்து விட்டதாக கூறி தப்பிக்காமல் இருக்க மனுக்களை 'ஸ்கேன்' செய்து அனுப்ப கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் திங்களன்று குறைதீர் கூட்டம் நடைபெறும். அன்றைய தினம் கலெக்டர் ஆஷா அஜித்திடம் மக்கள் நேரடியாக மனுக்களை வழங்குவர். கலெக்டர் அலுவலக குறைதீர் பிரிவில் (இ- செக்சன்) மக்கள் கொண்டு வரும் மனுக்களை பதிவு செய்து, அந்த மனுக்களை நேரடியாக மக்கள் கலெக்டரிடம் வழங்குவார். மனுக்களில் உள்ள கருத்தை பார்க்கும் கலெக்டர், உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்வார். துறை அதிகாரிகள் பெரும்பாலும், உடனுக்குஉடன் இந்த மனுக்களுக்கு தீர்வு பெற்று தருவதில்லை. அதே மனுக்களுடன் அடுத்த வாரம் நடக்கும் குறைதீர் கூட்டத்திற்கும் மக்கள் வருகின்றனர். கடந்த பல மாதங்களாக ஒரே மனுக்களை அடிக்கடி வழங்கியும், தீர்வு எட்டப்படவில்லை என அதிருப்தியை வெளிக்காட்டுவதற்காக பாதிக்கப்பட்ட மக்கள் மனுக்களை கலெக்டரிடம் வழங்கி வருகின்றனர்.

தொலைந்துவிடும் மனுக்கள்

ஒரே கோரிக்கைக்காக வரும் மனுக்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேட்டால்,அந்தந்த துறை அதிகாரிகள் சொல்லும் பதில், மனுக்களை காணவில்லை என்பது தான். இதுபோன்று மக்கள் தரும் மனுக்கள் மீது, அதிகாரிகள் முழு கவனம் செலுத்தாமல், தொலைந்துவிட்டது என கூறுவது, மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. இது குறித்து சிலர் கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் தெரிவித்தனர்.

'ஸ்கேன்' செய்யப்படும் மனுக்கள்

நேற்று முதல் குறைதீர் கூட்டத்திற்கு வரும் மனுக்களை பதிவு செய்வதோடு, அந்த மனுக்களை 'ஸ்கேன்' செய்து அதன் நகலை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துள்ளனர். இதற்கு பின், நடவடிக்கைக்காக கலெக்டர் அனுப்பும் மனுக்கள் தொலைந்துவிட்டதாக துறை அதிகாரிகள் பதில் சொன்னால், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் கலெக்டர், இந்நடைமுறையை பின்பற்ற கூறியதாக, அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை