| ADDED : ஆக 01, 2024 04:50 AM
மானாமதுரை: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாய்கள்,மாடுகள் தொல்லைகளால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.மானாமதுரை நகராட்சி கூட்டம் தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பாலசுந்தரம் வரவேற்றார். கமிஷனர் ரங்கநாயகி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:சதீஷ்குமார்,தி.மு.க., கவுன்சிலர்: குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் அப்படியே விடப்பட்டுள்ளன. குடிநீர் இணைப்புகளுக்கு எவ்வளவு கட்டணம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்காளீஸ்வரி, தி.மு.க., கவுன்சிலர்: நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள், நாய்கள் தொல்லைகளால் மக்கள் தினம்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாரிக்கண்ணன், தி.மு.க., கவுன்சிலர்: காந்தி சிலை அருகே சேதமடைந்துள்ள குடிநீர் தொட்டியை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும்.தெய்வேந்திரன், அ.தி.மு.க., கவுன்சிலர்: அரசகுழி மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு மேடை திறக்கப்படுவது எப்போது, கட்டணத்தை குறைவாக நிர்ணயம் செய்ய வேண்டும்.தேன்மொழி, தி.மு.க., கவுன்சிலர்: காட்டு உடைகுளம் பகுதியில் உள்ள கண்மாயில் சேதமடைந்த மடைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.செல்வகுமார், தி.மு.க., கவுன்சிலர்: பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள சமுதாயக்கூடத்தை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.பாலசுந்தரம், துணைத் தலைவர் தி.மு.க., : அனைத்து கவுன்சிலர்களின் வார்டு பகுதிகளுக்கும் சமமான முறையில் வேலைகளை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தலைவர் மாரியப்பன் கென்னடி, தி.மு.க.,: நகரில் சுற்றித் திரியும் மாடுகளை நகராட்சி நிர்வாகத்தினர் அவ்வப்போது பிடித்து வருகின்றனர்.இதனை கவுன்சிலர்கள் விடுவிக்க வேண்டுமென்று இனிமேல் சிபாரிக்கு வர வேண்டாம். கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.கூட்டத்தில் மேலாளர் பாலகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள்,ஊழியர்கள் கலந்து கொண்டனர்.