| ADDED : ஜூன் 11, 2024 10:57 PM
தேவகோட்டை : கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை காலையில் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சிவகங்கை சமஸ்தானத்தின் கீழ் சிறகிழிநாதர் என்ற சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மாம்பழத் திருவிழாவாக ஆனி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். ஆனியில் கேட்டை நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெறும். மன்னர்கள் காலத்தில் இப்பகுதி தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி என நான்கு நாடுகளாக பிரிக்கப்பட்டு 170 ஊர்களுக்கு சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தலைமை கோவிலாக இருந்து வருகிறது. இக்கோவில் தேரோட்டத்தில் வடம் பிடித்து இழுப்பதில் பிரச்னை நிலவியதால் தேரோட்டத்திற்கு தடை ஏற்பட்டு சில ஆண்டுகளுக்கு பின் இழுக்கப்பட்டது. கடந்த 2006ல் திருவிழாவில் நடந்த தேரோட்டத்திற்கு பிறகு கும்பாபிஷேகம், தேர் பழுது என்று காரணங்களை கூறி தேரோட்டம் நடைபெறவில்லை. திருவிழா நேரங்களில் சப்பரத்தில் சுவாமியை வைத்து பக்தர்கள் இழுத்தனர். இந்நிலையில் புதிய தேர்பணியும் முடிந்து வெள்ளோட்டம் நடைபெறாமல் இருந்தது. மதுரை ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து கடந்த பிப். 11 அதிகாலையில் 6:30 மணிக்கு தேவஸ்தான பணியாளர்கள் இழுக்க தேர் வெள்ளோட்டம் நடந்தது. 18 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம்
இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் திருவிழா நாளை ஜூன் 13 காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 9ம் நாள் கேட்டை நட்சத்திரத்தில் சொர்ண மூர்த்தீஸ்வரர் புதிய தேரில் முதன் முதலாக எழுந்தருளி வரும் ஜூன் 21 தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். தேரோட்டத்தை சுமூகமாக நடத்துவது குறித்து நேற்று தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் பால்துரை தலைமையில் டி.எஸ். பி. பார்த்திபன் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. இக்கூட்டத்தில் நான்கு நாட்டைச் சேர்ந்த அனைத்து தரப்பினர், அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நான்கு நாட்டைச் சேர்ந்த அனைத்து சமூகத்தினரையும் அந்தந்த நாட்டை சேர்ந்த வர்களே அழைத்து வருவதெனவும் தேரோட்டத்தை சிறப்பாக நடத்துவது என முடிவெடுத்தனர். மேலும் இவ்வாண்டு சுவாமி காலையில் தேரில் எழுந்தருளியவுடன் பக்தர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை நடத்துவது என அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். தேரோட்டம் தொடர்பான அனைவரிடமும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கலாம் என கூறப்பட்டது. மற்ற ஊர்களில் உள்ளது போல் இங்கும் காலையில் தேரோட்டம் நடத்த ஆலோசித்து வருகின்றனர்.