| ADDED : மார் 31, 2024 06:41 AM
திருப்புத்துார் : சிவகங்கை லோக்சபா தொகுதியில் பா.ஜ.,வினர் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கும் கூட்டங்களை நடத்துவதில் அ.தி.மு.க., இண்டியா கூட்டணியை விட பின்தங்கிய நிலையில் உள்ளதால் கட்சியினர் கவலையில் உள்ளனர்.அ.தி.மு.க.,வில் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து தொகுதி வாரியாக ஒன்றியங்களை இணைத்து 6 தொகுதிகளிலும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, வேட்பாளர் சேவியர் தாஸ் பிரசாரத்தை துவக்கி உள்ளார். ஒரே நாளில் ஒவ்வொரு ஒன்றியத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் வேட்பாளர் பிரசாரத்தை மின்னல் வேக டூர் மூலம் நடத்த உள்ளனர். இண்டியா கூட்டணியில் காங்.,வேட்பாளர் கார்த்தி தரப்பினர் முழுமையாக பணிகளை தி.மு.க.,வசம் ஒப்படைத்துள்ளனர். அமைச்சர் பெரியகருப்பன், ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் அனைத்து தொகுதிகளிலும் ஒன்றியம் வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். வேட்பாளர் பிரசாரத்தை நாளை துவக்க உள்ளனர். இந்நிலையில் பா.ஜ., வினர் புதுக்கோட்டை மாவட்ட ஆலங்குடி, திருமயம் தொகுதிகளில் தொகுதி வாரியாக நிர்வாகிகள் கூட்டம் நடத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தின் நான்கு தொகுதிகளில் பல இடங்களில் மண்டபங்களை பிடித்து நிர்வாகிகள் கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில் இதனை ரத்து செய்து விட்டு, தற்போது ஒன்றியத்திற்கு 10 நிர்வாகிகளை மட்டும் அழைத்து ஒரே நகரில் 4 தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி விட்டு நேரடியாக பிரசாரக் களம் செல்ல திட்டமிட்டுள்ளனர்.வேட்பாளர் பிரசாரத்தை ஒன்றியத்தில் உள்ள கிராமம் வாரியாக செல்லாமல், ஒன்றியத்தில் முக்கியமான சில 'பாய்ன்ட்' களிலும், பேரூராட்சிகளில் ஒரு பாய்ன்டில் மட்டும் பிரசாரம் செய்ய ஆலோசித்து வருகின்றனர். இப்படி தனி வழியில் பா.ஜ., செல்வது நிர்வாகிகளை கவலையடையச் செய்துள்ளது. இருப்பினும் ஏப்.,4 ல் மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையை முன்னிலைப்படுத்தி அனைத்து நிர்வாகிகளையும் வரவழைத்து பிரசாரத்தை வேகப்படுத்த பா.ஜ ., மேல் மட்ட நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.