| ADDED : நவ 20, 2025 04:05 AM
திருப்புத்துார்: நடப்பாண்டில் 16 ஆயிரம் கோடி பயிர்கடன் வழங்கப்படும்' என்று திருப்புத்துாரில் நடந்த 72வது அனைத்து இந்திய கூட்டுறவு வாரவிழாவில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். பயனாளிகளுக்கு கடனுதவி, கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கி அவர் பேசிய தாவது: தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் தேர்தல் நடத்தி கூட்டுறவுத்துறையில் பல தில்லு முல்லு' நடந்தன. அவற்றை சரி செய்து கூட்டுறவுத்துறையை மீட்டுள்ளோம். கிராம, நகர பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவுத்துறை பெரும் பங்கு வகிக்கிறது. நாட்டில் 70 சதவீதம் பேர் விவசாயம் செய்கின்றனர். இன்று வரை விவசாயத் தொழில் தொடர கூட்டுறவுத்துறை உதவியாக உள்ளது. உழவு, விதைக்கு நிதியுதவி, உரம், இடுபொருள் வழங்கல் என்று கூட்டுறவு சங்கங்கள் உதவுகின்றன. அது போல சிறுதொழில், விவசாயம், மகளிர் என்று 17 வகையான கடனுதவிகளும் வழங்கப்படுகின்றன. பயிர்கடனைப் பொறுத்தவரை அ.தி.மு.க., ஆட்சியில் 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி பயிர்க்கடனே வழங்கப்பட்டது. ஆனால் தி.மு.க., ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே 10 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது.இந்த ஆண்டு 16 ஆயிரம் கோடி பயிர்க்கடன் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அதை கூட்டுறவுத்துறை நிறைவேற்றும் இவ்வாறு அவர் பேசினார்.