| ADDED : ஏப் 21, 2024 04:19 AM
சிவகங்கைத் லோக்சபா தொகுதியில் காரைக்குடி சிவகங்கை மானாமதுரை திருப்புத்துார் ஆலங்குடி திருமயம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆறு தொகுதிகளுக்கு உட்பட்ட ஆயிரத்து 873 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் காரைக்குடியில் உள்ள ஓட்டு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டது. அழகப்பா இன்ஜி., கல்லுாரியில் காரைக்குடி மானாமதுரை சிவகங்கை மற்றும் திருப்புத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. அழகப்பா பாலிடெக்னிக் கல்லுாரியில் ஆலங்குடி மற்றும் திருமயம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. நேற்று 6 அறைக்கும் கலெக்டர் ஆஷா அஜித், எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ், தேர்தல் பார்வையாளர் ஹரிஸ் தலைமையில், வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. கலெக்டர் ஆஷா அஜித் கூறுகையில், 6 சட்டசபை தொகுதிகளில் நடந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவின்போது சில இயந்திரங்கள் மாற்றப்பட்டது. அவை உட்பட அனைத்து இயந்திரங்களின் எண்ணிக்கையும் சரிபார்க்கப்பட்டு, வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர், முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியானது சுழற்சி முறையில் நடைபெறுகிறது. ஒரு சுழற்சிக்கு துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் உட்பட 100 பேர் என 3 சுழற்சிக்கு 300 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அறை மட்டுமின்றி வளாகத்தின் நான்கு பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.கண்காணிப்பு கேமராக்களை 24 மணி நேரமும் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. வேட்பாளர்கள்முகவர்கள் உட்பட அனைவரும் இதை கண்காணிக்கலாம். மேலும் பாதுகாப்பு அறையும் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும்.