| ADDED : ஜன 15, 2024 11:03 PM
காரைக்குடி : சாக்கோட்டை வட்டாரத்தில் போதிய மழையின்றி கண்மாய்கள் மேய்ச்சல் நிலமாக மாறிவருகின்றன.இம்மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக நெல் விவசாயம் நடக்கிறது. 1,400 பொதுப்பணி, 4,000 ஊராட்சி ஒன்றிய கண்மாய்கள் உள்ளன. மத்திய, மாநில அரசு திட்டத்தில் கண்மாய்கள் தூர்வாரப்படுகிறது. ஆனால் போதிய மழையின்றி கண்மாய்கள் பலவும் மேய்ச்சல் நிலமாக மாறிவருகின்றன. சாக்கோட்டை வட்டாரத்தில் 4 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த மாதம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதும், சாக்கோட்டையில் போதிய மழையின்றி கண்மாய்களில் முழுமையாக தண்ணீர் தேங்காமல் உள்ளது.விவசாயிகள் கூறியதாவது, பள்ளத்தூர், வேலங்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் மானாவாரி விவசாயமே அதிகளவில் நடைபெறுகிறது. ஆடி மாதம் நெல்விதைப்பில் விவசாயிகள் ஈடுபவர். தை மாதம் அறுவடைப் பணி நடக்கும் ஆனால் இந்தாண்டு போதிய மழை இல்லாததால் விவசாயிகள் நெல் சாகுபடியில் ஆர்வம் காட்டவில்லை. போர்வெல் மூலம் மட்டுமே அதிகளவில் விவசாயம் நடக்கிறது. கண்மாய்கள் தண்ணீரின்றி கிடக்கிறது.