உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நான்கு வழிச்சாலையில் தொடரும் விபத்துக்கள்; மீட்பு வாகனம் வராததால் வாகன ஓட்டிகள் தவிப்பு

நான்கு வழிச்சாலையில் தொடரும் விபத்துக்கள்; மீட்பு வாகனம் வராததால் வாகன ஓட்டிகள் தவிப்பு

திருப்பாச்சேத்தி : மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் ஒவ்வொரு வருடமும் பராமரிப்பு ஒப்பந்தம் மாறும் காலங்களில் ஒருமாதம் வரை எந்த வித பணிகளும் நடைபெறாததால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு 2018 முதல் வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது.ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என பலரும் மதுரையில் இருந்து நான்கு வழிச்சாலை வழியாக ராமேஸ்வரம் சென்று திரும்புகின்றனர். மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலான 72கி.மீ.,தூர சாலையை பராமரிக்க ஒவ்வொரு வருடமும் டெண்டர் விடப்படுகிறது. புதிய ஒப்பந்தகாரர்கள் மாறுவதற்கு 15 முதல் 30 நாட்கள் வரை எடுத்து கொள்கின்றனர்.இந்த கால கட்டங்களில் சாலை பராமரிப்பு, மீட்பு பணி என எந்த பணிகளும் நடைபெறுவதில்லை. ஆனால் டோல்கேட்களில் வசூல் மட்டும் சரியாக நடைபெறுகிறது.நான்கு வழிச்சாலையில் தொலை துாரங்களுக்கு வாகனங்களை இயக்கி வருபவர்கள் ஓய்வெடுக்க சாலையோரம் சர்வீஸ் ரோடு, கழிப்பறை உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன.நான்கு வழிச்சாலையை ஒட்டி உயர் மின்கோபுர விளக்கு, சாலையோர விளக்கு உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒப்பந்தகாரர்கள் மாறும் போது மின் கட்டணத்தை யார் செலுத்துவது, உள்ளிட்ட நிர்வாகச்சிக்கல் காரணமாக ஒரு மாதத்திற்கு உயர் மின்கோபுர விளக்குகள் எரிவதில்லை. கழிப்பறைகளில் தண்ணீர் வசதி எதுவும் இன்றி பூட்டி வைத்து விடுகின்றனர். விபத்துக்களில் வாகனங்கள் சிக்கினால் கூட மீட்பு பணிக்கு கூட மீட்பு வாகனம் வருவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனை தவிர்க்க ஒப்பந்த காலத்தை மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். ஒப்பந்தம் மாறும் போது உடனடியாக பராமரிப்பு பணிகளை தாமதம் இன்றி மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை