உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசனுார், இலுப்பக்குடியில் சிப்காட் அமைப்பது இழுபறி: அரசு, மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்துமா

அரசனுார், இலுப்பக்குடியில் சிப்காட் அமைப்பது இழுபறி: அரசு, மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்துமா

சிவகங்கை,:-சிவகங்கை அருகே அரசனுார், இலுப்பக்குடியில் 1,100 ஏக்கரில் சிப்காட் துவக்குவதற்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் அக்கறை செலுத்தாததால் இப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.வறண்ட சிவகங்கை மாவட்டத்தில் வானம் பொழியும் மழை நீரை நம்பி தான் விவசாய தொழில் நடைபெற்று வருகிறது. இம்மாவட்டத்தில் குறிப்பிடும் விதத்தில் சில டெக்ஸ்டைல்ஸ் மட்டுமே உள்ளது. பெரிய தொழிற்சாலைகள் இல்லை. இம்மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் பனியன் கம்பெனி, டெக்ஸ்டைல்ஸ் மில்கள் அதிகமுள்ள திருப்பூர், கோயம்புத்துார், ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு வேலைக்காக சென்று விடுகின்றனர். குறிப்பாக மூன்று போகமும் விளைவிக்க செய்யும் விதமாக பெரியாறு மற்றும் வைகை பாசன கால்வாயில் இருந்து விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இதன் காரணமாக விவசாயத்தை செய்ய முடியாமல், அவற்றை கைவிட்டு ஏராளமான விவசாய குடும்பத்தினர் கூட திருப்பூர் செல்கின்றனர்.* 1,100 ஏக்கரில் 'சிப்காட்' திட்டம்:சிவகங்கை மாவட்ட இளைஞர்களை சுயதொழில் மூலம் தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கில், 2014 ம் ஆண்டில் சிவகங்கை அருகே அரசனுார், இலுப்பக்குடியில் 900 ஏக்கரில் இரு சிப்காட் தொழிற்பேட்டையை நிறுவ திட்டமிட்டனர். இங்குள்ள நிலம் சிப்காட் தொழிற்பேட்டைக்கு போதுமானதாக இருக்காது என்பதற்காக, 2015 ம் ஆண்டில் மேலும் 200 ஏக்கரை ஒதுக்கி, 1,100 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை ஏற்படுத்த திட்டமிட்டனர். இதற்காக தாசில்தார் தலைமையில், சர்வேயர், வருவாய் ஆய்வாளர், அலுவலக உதவியாளர் என தனி சிப்காட் அலுவலகம் சிவகங்கையில் துவக்கப்பட்டது. காலப்போக்கில், அரசும், மாவட்ட நிர்வாகம் அரசனுார், இலுப்பக்குடியில் சிப்காட் தொழிற்பேட்டை துவக்குவதில் ஆர்வம் செலுத்தவில்லை. அரசு நிலங்கள் உள்ள 450 முதல் 500 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே துவக்க 2015 ம் ஆண்டில் முடிவு செய்தனர். அதற்கு பின்னரும் இங்கு 'சிப்காட்' தொழிற்பேட்டை துவக்குவதற்கான பணிகளில் நிலம் கையகம் செய்தது, சிவகங்கை - மதுரை மெயின் ரோட்டில் அரசனுார் விலக்கில் இருந்து 'சிப்காட்' வளாகத்திற்கு செல்வதற்கென 50 அடி அகல ரோடு அமைப்பதற்கான இடத்தை மட்டுமே கணக்கிட்டு வைத்துள்ளனர்.தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தனி கவனம் செலுத்தி கிடப்பில் போடப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டையை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்./////தொடர் மூடுவிழா நோக்கி 'சிப்காட்' திட்டம்:பாக்ஸ் மேட்டர்:காரைக்குடியில் 'சிப்காட்' தொழிற்பேட்டை துவக்க வேண்டும் என அத்தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து 2016 ல் காரைக்குடி அருகே திருவேலங்குடியில் 1,400 ஏக்கரில் 'சிப்காட்' தொழிற்பேட்டை துவக்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்காக 4 தாசில்தார், 4 டைப்பிஸ்ட், 8 சர்வேயர், 4 அலுவலக உதவியாளர்கள் என நியமிக்கப்பட்டனர். 'சிப்காட்' தொழிற்பேட்டை போன்று பல்வேறு தொழில் வளர்ச்சி காரைக்குடியில் ஏற்படுவதை கருத்தில் கொண்டு தான், அப்போதே திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.,210) இருவழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால், காரைக்குடி அருகே திருவேலங்குடியில் 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கும் முயற்சியில் அரசும், மாவட்ட நிர்வாகமும் அக்கறை செலுத்தாத காரணத்தால், திருவேலங்குடி 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை 2019 ல் அப்போதைய (அரசாணை எண் 217 ன் படி) அரசு கைவிட்டுவிட்டது. இது போன்று தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்திற்கு வரும் 'சிப்காட்' தொழிற்பேட்டை திட்டங்கள் அரசால் கைவிடப்பட்டு வருவதாக தொழில் முனைவோர் கவலையுடன் தெரிவித்தனர்.//


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஆக 01, 2024 10:21

அன்றைய ராம்நாத் மாவட்டம், இன்றைய சிவகங்கை மாவட்டம்.. தமிழகத்திலேயே மிக பின்தங்கிய ஒன்றாகும். விவசாயம் இல்லை, தொழில்கூடங்கள் இல்லை, சுற்றுலா உள்ளது. எத்துணை காலங்கள் இதை நம்பி பிழைப்பை ஓட்டுவது. தொழில்சாலைகள் வந்தால்தான் இனிமேல் அக்கல் இங்கு வாசிக்கமுடியும் காரைக்குடி, சிவகங்கையில் தொழில்பேட்டைகள் அமைக்க அரசு முழுமுயற்சியெடுக்கவேண்டும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை