| ADDED : பிப் 24, 2024 04:00 AM
மானாமதுரை, : மானாமதுரை தாலுகாவில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து பாஜ.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட குலையனுார்,செய்களத்துார், சிப்காட் கொன்னக்குளம், வேம்பத்துார், இடைக்காட்டூர், முத்தனேந்தல், வாகுடி, கட்டிக்குளம், விளத்துார் தஞ்சாக்கூர், மிளகனுார், அன்னவாசல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூடைகளை கொள்முதல் செய்வதற்கு அரசு ஒரு மூடைக்கு ரூ.10 நிர்ணயித்துள்ளது.இந்நிலையில் சில நெல் கொள்முதல் நிலையங்களில் இந்த கட்டணத்தை விட கூடுதலாக ரூ.30 லிருந்து ரூ.45 வரை வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வேம்பத்துாரில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக வசூல் செய்ததை தொடர்ந்து தற்காலிகமாக நெல் கொள்முதல் நிலையத்தை மூட அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மானாமதுரை பா.ஜ., ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் கூறுகையில், மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் பணம் வசூல் செய்யப்படுவது குறித்து மாவட்ட கலெக்டரிடமும், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடமும், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திலும் மனு கொடுத்துள்ளோம்.ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில் தற்போது வேம்பத்துார் நெல் கொள்முதல் நிலையத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளனர். அதே போன்று அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நடவடிக்கை எடுக்க கோரி விரைவில் பா.ஜ., சார்பில் மானாமதுரை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றார்.