காவிரி குடிநீர் திட்ட குழாய் சேதம்; சிவகங்கை ரயில்வே மேம்பாலத்திற்கு ஆபத்து
சிவகங்கை; சிவகங்கையில் மதுரை- - தொண்டி ரோடு மேம்பாலத்திற்கு கீழே காவிரி கூட்டு குடிநீர் குழாய் சேதமுற்று குடிநீர் அடிக்கடி தேங்குவதால், பாலத்திற்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மதுரை - தொண்டி ரோட்டில் சிவகங்கையில் ரயில்வே மேம்பாலத்திற்காக 2012 ம் ஆண்டில் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டது. இந்நிதியில் மேம்பாலம் கட்டிய பின் மதுரை - - தொண்டி இடையே ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே காளையார்கோவிலில் இருந்து சிவகங்கைக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்கின்றனர். காவிரி கூட்டுகுடிநீர் குழாய் பல இடங்களில் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. குறிப்பாக மேம்பாலத்தின் ஸ்திரத்தை இழக்க செய்யும் விதமாக பாலத்தின் அடியிலேயே காவிரி குடிநீர் பல நாட்களாக பெருக்கெடுத்து ஓடுகிறது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பாலத்திற்கு கீழ் செல்லும் காவிரி கூட்டுகுடிநீர் குழாயை துண்டித்து மாற்று வழியில் குடிநீர் குழாயை சிவகங்கைக்குள் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.