விவசாயிகள் தனி அடையாள எண்பதிவுக்கு ஏப். 30 கால அவகாசம்
சிவகங்கை: விவசாயிகள் தேசிய அடையாள எண் பெறுவதற்கான பதிவை ஏப்., 30 வரை நீட்டித்துள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) மதுரைசாமி தெரிவித்தார்.அவர் கூறியதாவது, மத்திய, மாநில அரசின் நலத்திட்டத்தின் பலன்களை விவசாயிகள் பெற தங்களின் நில உடைமை விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை சமர்பிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கவும், அரசின் திட்டங்களை விவசாயிகள் உரிய நேரத்தில் பெறும் வகையில், அனைத்து விபரங்களை மின்னணு முறையில் சேகரிக்க தமிழகத்தில் வேளாண் அடுக்கக திட்டம் செயல்படுகிறது.தற்போது விவசாயிகள் பதிவு எண்ணை பெற, ஆதார் எண், அலை பேசி எண், நில விபரங்களை பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இது வரை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களது நில உடைமை விபரங்களை உடனே பதிவு செய்து தனி அடையாள எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக ஏப்., 15 வரை கடைசி நாள் என அறிவித்தனர். அன்று வரை 96,144 விவசாயிகள் பதிவு செய்து, தனி அடையாள எண் பெற்றுள்ளனர். இன்னும் 30,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும். இதற்காக விவசாயிகள் அடையாள எண்ணுக்கு வட்டார வேளாண்மை அலுவலகம், பொது சேவை மையங்களில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஏப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, என்றார்.