| ADDED : டிச 03, 2025 06:04 AM
மானாமதுரை: மானாமதுரையில் ரோட்டை ஆக்கிரமிக்கும் நாய்கள்,மாடுகள் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்களால் பஸ்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் ரோட்டில் தினந்தோறும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள், சரக்கு வாகனங்கள், கார், வேன்கள் சென்று வருகின்றன. சி.எஸ்.ஐ., உயர்நிலைப்பள்ளி எதிர்புறம் ரோட்டின் ஒரு பகுதியில் ஏராளமான நாய்களும், மாடுகளும், மற்றொரு புறத்தில் ஏராளமான மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் கழிவுநீர் அகற்றும் இயந்திரங்கள் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளதால் இப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் சிஎஸ்ஐ உயர்நிலை,காது கேளாதோர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆயிரக்கணக்கில் இந்த ரோட்டின் வழியாக செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏராளமான மாடுகள் ரோட்டை ஆக்கிரமித்து ரோட்டின் மையப் பகுதியில் படுத்துக்கொள்வதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.