உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எதிர்பார்ப்பு அகரம், மணலூரில் அகழாய்வு மீண்டும் நடக்குமா: தனியார் நில உரிமையாளர்கள் அச்சத்தால் சிக்கல்

எதிர்பார்ப்பு அகரம், மணலூரில் அகழாய்வு மீண்டும் நடக்குமா: தனியார் நில உரிமையாளர்கள் அச்சத்தால் சிக்கல்

கீழடி: தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடி அகழாய்வில் இனி அகரம்,மணலுாரில் அகழாய்வு பணி மீண்டும் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.கீழடியில் 2015ல் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் அகழாய்வு பணிகள் தொடங்கின, மூன்று கட்ட அகழாய்விற்கு பின் 4ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை தொடங்கியது. தமிழக தொல்லியல் துறை கீழடி மட்டுமல்லாது அகரம், மணலுார்,கொந்தகை உள்ளிட்ட இடங்களிலும் கூடுதலாக அகழாய்வு பணிகளை தொடங்கியது.இதில் அகரத்தில் கெண்டி மூக்கு பானை,தங்க அணிகலன்,வெவ்வெறு கால கட்டங்களைச் சேர்ந்த உறைகிணறுகள், அரிசி உள்ளிட்ட ஏராளமான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. கடைசியாக அகரத்தில் 2022ம் ஆண்டுடன் அகழாய்வு நிறைவு பெற்றன. அதன்பின் இன்றுவரை பணிகள் தொடங்கப்படவே இல்லை.மணலுாரில் இரண்டு கட்டங்களாக அகழாய்வு நடந்ததுடன் சரி அதன்பின் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன.மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் 110 ஏக்கர் பரப்பளவில் கீழடியைச்சுற்றி அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும், அப்போதுதான் நகர நாகரீகத்திற்கான ஏராளமான ஆதாரங்கள் கிடைக்கும் என தெரிவித்திருந்தார்.மணலுாரில் தொல்லியல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பில்லை என தமிழக தொல்லியல் துறை கை விரித்து விட்டது. அகரத்திலும் இனி அகழாய்வு நடைபெற வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அகரம், மணலுார் உள்ளிட்டஇடங்களில் அரசு இடம் என எதுவுமே இல்லை. நிலங்கள் அனைத்தும் தனியார் விவசாய நிலங்களாக உள்ளன. அகழாய்வு பணிகளுக்கு நிலங்களை வழங்கினால் நிலங்கள் திரும்ப கிடைக்காது என்ற எண்ணத்தில் அகழாய்வு பணிகளுக்கு நில உரிமையாளர்கள் தர மறுக்கின்றனர். தொல்லியல் துறை அதிகாரிகள் நில உரிமையாளர்களிடம் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தாமல் அவர்களை அலைக்கழிப்பதால் நிலங்களை தர மறுப்பதாகவும் கருத்து நிலவுகிறது.நிலம் கிடைக்காததால் அகழாய்வு பணிகளையே தொல்லியல் துறை கை விட்டு விட்டது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே 2600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் வாழ்ந்த வாழ்விடங்களுக்கான ஆதாரங்களை முழுமையாக வெளி கொணர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ