| ADDED : டிச 05, 2025 06:03 AM
சிவகங்கை: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 12 விதமான கோரிக்கையை முன்வைத்து சிவகங்கையில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த 170 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அரசு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி, சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சிவகங்கை எம்.ஜி.ஆர்., சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாரி தலைமை வகித்தார். மகளிர் அமைப்பாளர் லதா வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் தமிழரசன் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி நன்றி கூறினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 89 ஆண், 81 பெண் ஊழியர்கள் என 170 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.