| ADDED : ஜன 05, 2024 04:33 AM
சிங்கம்புணரி, ; சிங்கம்புணரியில் மஞ்சுவிரட்டு காளைகளுக்கான அலங்கார சலங்கைகள் இரவு பகலாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் மஞ்சு விரட்டுகளுக்கு பெயர்பெற்ற சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான காளைகள் வளர்க்கப்படுகின்றன. மஞ்சுவிரட்டுக்கு செல்லும்போது காளைகளுக்கு அலங்கார சலங்கைகள் அணிவிப்பது இப்பகுதியில் வழக்கம்.சிங்கம்புணரியில் தயாரிக்கப்படும் சலங்கைகளுக்கு சுற்று வட்டார மாவட்டங்களில் கிராக்கி உள்ளது. இந்த சலங்கைகளை தொழிலாளர்கள் இரவு பகலாக தயாரிக்கின்றனர்.இங்கு தலைமுறையாக சில குடும்பத்தினர் அலங்கார மணிகளை தயாரிக்கின்றனர்.ஒரு காலத்தில் மஞ்சுவிரட்டுகளில் பிடிபடாமல் கெத்து காட்டும் காளைகளுக்கு மட்டுமே சலங்கைகளை அணிவிப்பர்.திடலில் மணி மாடு வருகிறது என்றால் பல வீரர்கள் ஒதுங்கி விடுவர், சிலர் மட்டுமே அம்மாட்டை அடக்க முயற்சிப்பர். தற்போது அனைத்து மாடுகளுக்கும் சலங்கைகளை அணிவிக்க துவங்கியுள்ளதால் சலங்கை தயாரிப்பு தொழிலும் விரிவடைந்துள்ளது.ஆரம்பத்தில் 2 பேர் மட்டுமே இத்தொழில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது பலர் சலங்கைகளை தயாரிக்கின்றனர். சலங்கைக்கு தேவையான நுால் குஞ்சங்களை தயாரிக்கும் பணியில் பெண்களும் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனந்த், சலங்கைத் தொழிலாளி: 4வது தலைமுறையாக சலங்கை தயாரிக்கிறோம். ஆண்டு முழுவதும் சலங்கை தயாரித்தாலும் கார்த்திகை முதல் தை வரை மட்டுமே இத்தொழில் பரபரபாக இருக்கும். 1800 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை சலங்கை உள்ளது.சிங்கம்புணரி மணி என்றாலே சுற்றுவட்டார மாவட்டங்களில் நல்ல கிராக்கியுள்ளது.4,6,8 அறுவை கொண்ட சாதா மணிகள் கும்பகோணம் மணிகள் உள்ளன.இதை தவிர அரியக்குடி மணிகளும் தேவைக்கு ஏற்றபடி செய்து தருகிறோம். புதிய சலங்கைகள் மட்டுமல்லாமல் பழைய சலங்கைகளையும் புதுப்பித்து கொடுக்கிறோம், என்றார்.