காரைக்குடியில் ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு போலீஸ் பாதுகாப்புடன் காதி கடை திறப்பு
காரைக்குடி; காரைக்குடி செக்காலை ரோட்டில் உள்ள சர்வோதயா கடை, நீதிமன்ற உத்தரவின்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை ரஸ்தாவை தலைமையிடமாகக் கொண்டு காதி சர்வோதயா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, பள்ளத்துார், தேவகோட்டை, மானாமதுரை உட்பட 10 இடங்களில் கடைகள் உள்ளன. இக்கடைகளில் பொறுப்பாளர்களை நியமிப்பது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்னையால் 13 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். சர்வோதயா சங்க செயலாளரான ஜோதி தலைமையில், பொறுப்பாளர்கள் நிர்வகித்து வந்தனர். இந்நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கடை திறக்கப்படவில்லை. இது சம்பந்தமான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்தது. இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம் செய்தனர். இது சம்பந்தமாக தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. தாசில்தார் ராஜா இரு தரப்பினரையும் அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் கடையை திறந்து விற்பனை செய்தனர். இதனைக் கண்டித்து, மற்ற நிர்வாகிகள் கடை முன்பு கூடி எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் கடை அடைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று, நீதிமன்ற உத்தரவின்படி 50க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் கடை திறக்கப்பட்டது.