| ADDED : மார் 10, 2024 06:30 AM
காரைக்குடி : காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சியில் வீடு கட்டுவதற்காக பிளான் அப்ரூவலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த பல மாதங்களாக கிடப்பில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தின் 2வது மிகப்பெரிய ஊராட்சி சங்கராபுரம். காரைக்குடி நகருக்கு அருகே உள்ளதால்,இங்கு 18 ஆயிரம் வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். வரிகள் வீதம் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது.வளர்ந்து வரும் நகர் பகுதியாக இருப்பதால், அதிகளவில் வீடுகள் கட்டி குடியேறி வருகின்றனர். தொடர்ந்து வீடுகள் கட்டுவதற்காக ஊராட்சி நிர்வாகத்தில் பிளான் அப்ரூவலுக்கு விண்ணப்பித்து பல மாதங்களாக காத்துஇருக்கின்றனர். இதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்து 80க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளன. இதனால் நடுத்தர மக்கள் வீடு கட்டும் பணிகளை துவக்க முடியாமல் தவிக்கின்றனர். பிளான் அப்ரூவல் கிடைத்த பின் தான் வங்கிகளில் கடனுதவி பெற்று பணிகளை துவக்க முடியும். கட்டுமான பொருட்கள்விலை உயர்வால், அப்ரூவல் காலதாமதம் காரணமாக விலை உயர்வு காரணமாகவும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். விண்ணப்பித்தவர்களுக்கு உரிய காலத்திற்குள் அப்ரூவல் கிடைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தேவி கூறியதாவது: இந்த ஊராட்சிக்கு தனி அலுவலர் நியமித்துள்ளனர். அவர் தான் அதற்கான பணிகளை செய்ய வேண்டும். அவரும் தற்போது ஓய்வில் சென்றுவிட்டார். இதற்கான அலுவலர்களை நியமிக்காததால், பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளோம், என்றார்.