மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை: 6 பேருக்கு இரட்டை ஆயுள்
சிவகங்கை: தேவகோட்டை அருகே மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஆறு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கோனேரிவயல் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மனைவி காளிமுத்தம்மாள் 60. இவர் 2010 அக். 18 இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். வீட்டில் புகுந்த கும்பல் அவரை கொலை செய்து அவரிடம் இருந்த தங்க நகை மற்றும் அலைபேசியை கொள்ளையடித்துச் சென்றது. தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரித்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா கோவில்பட்டி கிராமத்தில் இருந்து அங்கு வந்து கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த சிலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. தங்கராஜ் 30, ஆண்டிச்சாமி 33, கருப்பு ரோஸ் என்ற முருகேசன் 22, ஆளவந்தான் என்ற ராஜா 23, காயாம்பு 32, மூக்கன் மகன் சின்னச்சாமி 34, பாகன் மகன் சின்னச்சாமி 30 ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மகிளா விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. விசாரணையின் போது ஆண்டிச்சாமி இறந்தார். தங்கராஜ், கருப்பு ரோஸ் என்ற முருகேசன், ஆளவந்தான் ஆகிய மூன்று பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும்,10 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ. 3 ஆயிரம் அபராதமும், காயாம்பு, மூக்கன் சின்னச்சாமி, பாகன் மகன் சின்னச்சாமி 3 பேருக்கும் இரட்டை ஆயுளும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டார்.