| ADDED : டிச 03, 2025 06:03 AM
சிவகங்கை: காளையார்கோவில் அருகே உள்ள பெரிய கிளுவச்சி கிராமத்தில் பள்ளிக்கூடத்தில் போதிய வகுப்பறை இல்லாததால் அங்குள்ள நாடக மேடையில் உள்ள அறையை வகுப்பறையாக பயன்படுத்தும் அவலம் நீடிக்கிறது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது பெரியகிளுவச்சி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு போதிய கட்டட வசதி கிடையாது. 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் படிப்பதற்கு 8 வகுப்பறைகள் உள்ள கட்டட வசதி வேண்டும். ஆனால் இங்குள்ள கட்டடத்தில் இரண்டு வகுப்பறை தான் உள்ளது. அதிலும் ஒன்றில் ைஹடெக் லேப் உள்ளது. ஒரு வகுப்பறையில் தான் மாணவர்கள் படிக்கும் சூழல் உள்ளது. மற்ற மாணவர்களை அந்த கட்டடத்தில் வராண்டா பகுதியிலும், மரத்தடி, நாடக மேடையில் உள்ள அறையில் வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். போதுமான வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்களின் சேர்க்கை குறைந்துள்ளது. இந்த பள்ளியில் அருகிலுள்ள குறுக்கத்தி, கல்குளம், அய்யம்பட்டி, கருங்காலி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வந்த நிலையில் போதிய கட்டட வசதி இல்லாததால் 6 கிலோமீட்டர் துாரத்திலுள்ள கொல்லங்குடி பள்ளியில் படிக்கும் சூழல் உள்ளது. இதனால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து தற்போது 34 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். கிளுவச்சி கந்தசாமி கூறுகையில், பள்ளிக்கூடத்திற்கு போதிய கட்டட வசதி இல்லாததால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மழைக்காலங்களில் படிப்பதற்கு சிரமப்படுவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள கொல்லங்குடி பள்ளிக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.