உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  தனியார் மதுக்கடை திறக்க எதிர்ப்பு

 தனியார் மதுக்கடை திறக்க எதிர்ப்பு

காரைக்குடி: காரைக்குடி பர்மா காலனியில் தனியார் மதுபான கடை திறப்பிற்கு மூன்றாவது நாளாக பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வருவாய்துறையினர் கடைக்கு பூட்டு போட்டனர். காரைக்குடி பர்மாகாலனி பஸ் ஸ்டாப் எதிரே புதிதாக தனியார் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. அருகிலேயே கோயில், மருத்துவமனை, பஸ் ஸ்டாப், சர்ச் மற்றும் குடியிருப்புகள் உள்ள நிலையில், விதிமுறைகளை மீறி புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டதாக கூறி பொதுமக்கள், பல்வேறு கட்சியினர், சமூக ஆர்வலர்கள் நவ. 17 ம் தேதி மதுக்கடையை முற்றுகையிட்டனர். தாசில்தார் ராஜா பேச்சுவார்த்தை நடத்தி கடை திறக்கப்படாது என்று உறுதி அளித்ததின் பெயரில் மக்கள் கலைந்து சென்றனர். ஆனால் மாலையில் கடையை திறந்து மது விற்பனை நடந்ததாக கூறி நேற்று முன்தினம், மக்கள் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தி.மு.க., பா.ஜ., அ.தி.மு.க., த.வெ.க., காங்., உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பந்தல் அமைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் பேச்சுவார்த்தை நடத்தி கடையை மூட உத்தரவிட்டார். வருவாய்த்துறையினர் கடைக்கு பூட்டு போட்டதை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ